×

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா: கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 

கரூர்: கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கரூர் மாரியம்மன் கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இங்கு 21 நாள் வைகாசி பெருந்திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 10ம் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் துவங்கியது. கடந்த 15ம் தேதி பூச்சொரிதல், 17ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. கம்பம் நட்ட நாளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று கம்பத்திற்கு புனித நீரூற்றி வழிபட்டனர்.

17ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. 24ம் தேதி முதல் நேற்று வரை மாவிளக்கு ஏற்றி, அலகு குத்தி, பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 25ம் தேதி தேரோட்டம் நடந்தது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு நேற்றிரவு கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு பூஜை செய்து கம்பம் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் எடுத்துசெல்லப்பட்டது. வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்துக்கு மலர் தூவியும், வீட்டின் மாடிகளிலிருந்து பூமாலைகளை கம்பத்தின் மீது வீசியும் வழிபட்டனர். பின்னர் அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் கம்பம் விடப்பட்டது. அப்போது ஆற்றில் வாணவேடிக்கை நடந்தது. விழாவையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

Tags : Karur Mariamman Temple Vaikasi Festival ,Kambam River ,Karur ,Vaikasi festival ,Karur Mariamman Temple ,Mariamman ,Temple ,
× RELATED திரைபட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் (49) உடல்நலக்குறைவால் காலமானார்.