×

கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் கிடைக்காமல் சேரகுளம் பஞ். மக்கள் அவதி

 

செய்துங்கநல்லூர், மே 28: கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் சேரகுளம் பஞ்சாயத்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கருங்குளம் யூனியனுக்குட்பட்ட சேரகுளம் பஞ்சாயத்து, இந்த யூனியனில் அதிக குக்கிராமங்களை கொண்ட பஞ்சாயத்தாகும். சேரகுளம், வெற்றிகுளம், ரியந்தூர், மகிழ்ச்சிபுரம், சின்னார்குளம், தீராத்திகுளம், சுப்பிரமணியபுரம், இலுப்பைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கிராமங்களுக்கான குடிநீர் விநியோகம், கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கிருந்து கருங்குளம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படும் தண்ணீர், பின்னர் சேரகுளம் நீரேற்று நிலையம் வழியாக அனைத்து குக்கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேரகுளம் மற்றும் சுற்றியுள்ள இலுப்பைகுளம், ரியந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், சேரகுளம் நீரேற்று நிலையத்திற்கு நேரடியாக சென்று, இங்குள்ள குடிநீர் தொட்டிக்குள் அபாயகரமான முறையில் இறங்கி தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டாலும், உரிய பதில் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஒவ்வொரு குக்கிராமத்திலும் 200 முதல் 300 வீடுகள் உள்ள நிலையில், வெறும் 5 முதல் 7 குடிநீர் குழாய்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் வரும் நேரங்களில் பெண்களுக்குள் தகராறு ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனக் கூறி ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி குழாய்கள் பதிக்கப்பட்டாலும், இன்று வரை எந்த வீட்டிற்கும் குடிநீர் வராத நிலை தொடர்கிறது. தற்போது இந்த குழாய்கள் மற்றும் பைப்புகளும் காணாமல் போயுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சேரகுளம் பஞ்சாயத்து பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Tags : Cherakulam ,Panchayat ,Seruthangallur ,Cherakulam Panchayat ,Karungulam Union ,Vetrikulam ,Riyandhur ,Giddhispuram ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது