×

மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம்

 

தாம்பரம், மே 28: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுகாம்பாள் உடனுறை ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து, மாட வீதிகளில் சாமி தரிசனம் செய்து பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை துவக்கி வைத்தார்.

பின்னர் சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுடன் இணைந்து வழிபட்டார். இந்த ஆண்டின் திருத்தேரோட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, கிரமத்தார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களை பரவசப்படுத்தியது. மேலும், சந்திரசேகரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேளதாளங்கள் முழங்க பக்தி இசைகளுடன் நடைபெற்ற தேரோட்டம் பக்தர்களின் ஆன்மிக உணர்வை மேலும் உயர்த்தியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த தேனுபுரீஸ்வரர் திருத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருத்தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

Tags : Thirutherottam ,Thenupureeswarar Temple ,Madambakkam ,Tambaram ,Brahmotsavam ,Madambakkam, Udanurai ,Lord ,
× RELATED திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் படி...