×

குதிரை பேரத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை; இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவோம்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

 

புதுச்சேரி, மே 28: எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக கட்சியில் இணைத்தது ஜனநாயக படுகொலையாகும். இது குதிரை பேரத்தை விட மோசமானது. வரும் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். புதுச்சேரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அன்புமணி ராமதாஸ், நாவற்குளத்தில் உள்ள முன்னாள் எம்பி தன்ராஜ் இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைத்திருப்பது ஜனநாயக படுகொலையாகும்.

மக்கள் விருப்பத்துக்கு எதிராக எம்எல்ஏக்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை. இது குதிரை பேரத்தைவிட மோசமானது. வாக்களித்த மக்கள் என்ன தவறு செய்தனர்? எந்த காரணமும் இல்லாமல் 20 நாட்களில் ராஜினாமா செய்து இடைத்தேர்தலை ஏற்படுத்தியிருப்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. ராஜினாமா செய்த 4 பேரும் இடைத்தேர்தலில் படுதோல்வி அடைவார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை அறிவிப்போம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். ராஜினாமா செய்த 10 நிமிடங்களில் கட்சியில் இணைந்துள்ளனர்.

இனி அவர்கள் தங்கள் தொகுதிக்குள் செல்ல முடியாது. மேகதாது அணை விவகாரம், சமூக நீதி கணக்கெடுப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், ஜனநாயகத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடக்கூடாது. இது தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத அரசியல் கலாசாரம். இதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் வலியுறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. அதிமுகவில் நடைபெறும் அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை, என்றார்.

 

Tags : Tamil Nadu ,PMK ,Anbumani Ramadoss ,Puducherry ,Anbumani… ,
× RELATED தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் ஆக...