புதுச்சேரி, மே 26: புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி கல்வியை தொடர சிறப்பு அனுமதி வழங்க வேண்டுமென கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரியில் அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ கல்வித்திட்டத்தை பின்பற்றி வருகிறது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டு அரசு பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை அமல்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இரண்டு இந்திய மொழிகள்( தமிழ், இந்தி), ஒரு வெளிநாட்டு மொழி(ஆங்கிலம்) படிக்க ஆணையிட்டுள்ளது. இதன்காரணமாக புதுச்சேரி வரலாற்றில் நெருங்கிய தொடர்புடைய பிரெஞ்சு மொழியை, அரசு பள்ளிகளில் கற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 2022-23 கல்வியாண்டு முதல் ஒன்றிய கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 2025-26 கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் புதுச்சேரி 99.81 சதவீதம் சிறப்பான தேர்ச்சி சதவீதத்தை எட்டியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சூழலில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் மும்மொழிக் செயல்படுத்துவது குறித்து தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
தேசியக் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளை பாராட்டினாலும், இரண்டு இந்தியத் மொழிகள் மட்டுமே படிக்க முடியும் என்ற தற்போதைய கட்டமைப்பின் கீழ், புதுச்சேரி பள்ளிகளில் பிரெஞ்சு மொழியின் தொடர்ச்சி குறித்த மக்களின் கவலைகளை தெரிவிக்க விரும்புகிறேன். புதுச்சேரியைப் பொறுத்தவரை, பிரெஞ்சு மொழி என்பது வெறும் ஒரு வெளிநாட்டு மொழி மட்டுமல்ல, அது, ஒப்படைப்பு ஒப்பந்தம்(Treaty of cession) மற்றும் பிரான்சுடனான எங்களது நீண்டகால வரலாற்று, பண்பாட்டு அடையாளத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாகும். புதுச்சேரியில் வசிக்கும் கணிசமான மக்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருப்பதும், பிரெஞ்சு ஜனநாயக அமைப்புகளில் பங்கேற்று பிரான்சுடன் நெருங்கிய உறவை தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகின்றனர்.
இந்தப் பகிரப்பட்ட பாரம்பரியம், பெருமையையும் உணர்வுப்பூர்வமான முக்கியத்துவத்தையும் அளிக்கிறது. எனவே இந்த நீண்டகாலக் கல்விப் பாரம்பரியத்தைத் தொடரக்கோரி, பெற்றோர்கள், கல்வியாளர்கள், அமைப்புகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் எனக்கு வந்துள்ளது. எனவே புதுச்சேரியின் தனித்துவமான மொழி, பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, தேசியக் கல்வி கொள்கை நோக்கங்களுக்கும் சமநிலையான தீர்வினை உருவாக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். இந்தத் தனித்துவமான பின்னணியைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிக் கல்வியை பாதுகாப்பதற்கு ஏற்றதொரு முடிவை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் ஆர்3 பிரிவின் கீழ், பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியான இந்திய மொழிக்கு இணையாக ஒரு பிராந்திய மொழியாக சிறப்பு அங்கீகாரம் வழங்குவது அல்லது சிபிஎஸ்இ கட்டமைப்புக்குள் மாணவர்கள் பிரெஞ்சு மொழியைத் தடையின்றி தொடர்ந்து கற்க உதவும் ஒரு நெகிழ்வான சிறப்பு அனுமதி வழிமுறையை உருவாக்கலாம். இது தொடர்பாக பரிசீலனை செய்து உரிய வழிகாட்டுதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
