புதுச்சேரி, மே 28: முதல்வர் ரங்கசாமி தலைமையில் புதிய ஆட்சி அமைந்தும் 3 அமைச்சர்கள் பொறுப்பேற்காதது, இலாகா ஒதுக்காததால் அன்றாடத் தேவைகளுக்கு அரசை மக்கள் அணுக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி 16வது சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராக ரங்கசாமியை தேர்வு செய்து, ஆதரவு கடிதம் வழங்கினர். இதையடுத்து அவர் ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதனை தொடர்ந்து 5-வது முறையாக புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 13ம் தேதி பதவியேற்றார். பா.ஜனதாவை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு இதுவரை எந்த இலாகாவும் ஒதுக்கவில்லை. மேலும் 3 அமைச்சர்கள் நியமிக்க வேண்டும். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜ கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி யாருக்கு எந்த பதவி என்பதை முடிவு செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்து மூன்று வாரம் முடிந்தும் இதுவரை அதற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. அமைச்சர்கள் முறையாகப் பதவியேற்காமல் அல்லது இலாகாக்கள் (துறைகள்) ஒதுக்கப்படாமல் இருப்பது, அரசு நிர்வாகத்தில் கடுமையான தேக்கத்தை ஏற்படுத்தும்.
துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இல்லாததால் கொள்கை முடிவுகள், புதிய திட்டங்கள் மற்றும் அன்றாட கோப்புகள் நகராமல் தேங்கிக் கிடக்கும். நிதித்துறைக்கான அமைச்சர் இல்லாத சூழலில், வரவு-செலவு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் சிக்கல் ஏற்பட்டு அரசு ஊழியர்களின் சம்பளம் அல்லது நலத்திட்டப் பணிகள் முடங்கும். இயற்கை பேரிடர்கள் அல்லது அவசர மருத்துவ நெருக்கடிகள் ஏற்படும் போது, விரைந்து முடிவெடுக்கத் துறை சார்ந்த அமைச்சர்கள் இல்லாதது நிலைமையை மேலும் சிக்கலாக்கும். சான்றிதழ்கள் வழங்குதல், பொதுப் பணித் திட்டங்கள், விவசாயம், சுகாதாரம் போன்ற அன்றாடத் தேவைகளுக்கு மக்கள் அணுக முடியாத நிலை உருவாகும். முதலமைச்சரே அனைத்துத் துறைகளையும் கவனித்தாலும், அனைத்து அமைச்சகங்களுக்கும் முழுநேர அமைச்சர்கள் இல்லாதது அரசின் செயல்பாட்டைத் தற்காலிகமாகப் பலவீனப்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பாஜ வட்டாரத்தில் கூறுகையில், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் பாஜவினர் முதல்வர் ரங்கசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அவரும் ஆலோசனை செய்து முடிவு எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார். அதன்பிறகு தொடர்ந்து பேசியும் இதுவரை முதல்வர் எந்த செவியும் சாய்க்கவில்லை. இனிமேல் யாருக்கு அமைச்சர் பதவி, என்ன இலாகா என்பது குறித்து முதல்வர் ரங்கசாமி முடிவு செய்து கொள்ளட்டும். இது தொடர்பாக பாஜ தலையிடாது. தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்து 35 அமைச்சர்கள் பதவி ஏற்றுவிட்டனர். சட்டமன்றமும் கூடி நிரந்தர சபாநாயகரையும் தேர்வு செய்துவிட்டனர். புதுவையுடன் சேர்த்து தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் புதிய ஆட்சி அமைந்து, அமைச்சரவை அமைந்து துறை ரீதியான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சிறிய மாநிலமான இங்கு, நிரந்தர சபாநாயகர் கூட தேர்ந்து எடுக்க முடியாமல் உள்ளது. விரைவில் முதல்வர் முடிவுபடி சபாநாயகர், புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும், என்றனர். என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது: பாஜ தரப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இலாகா, ஜோஸ் சார்லசுக்கு அமைச்சர் பதவி கேட்டு வருவதே தாமதத்துக்கு காரணம், இதன் காரணமாகவே இலாகா ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது. முதல்வர் மட்டுமே இதற்கு காரணமில்லை. பேச்சுவார்த்தையில் பாஜ இறங்கி வரவேண்டும்.
4 தொகுதி மட்டுமே இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளனர். ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் கடந்த முறை போலவே 2 அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளை தர வேண்டும் என்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. மேலும் நியமன எம்எல்ஏக்களில் ஒரு எம்எல்ஏவை என்.ஆர் காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சரியான பதில் இல்லை. அதேபோல் எல்ஜேகே தலைவர் ஜோஸ் சார்லசுக்கு, அமைச்சர் பதவி கொடுக்கும் பாஜவின் முடிவு ரங்கசாமிக்கு துளியும் பிடிக்கவில்லை.
இதனால்தான் அவர் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் அமைதி காக்கிறார். அமைச்சர்கள் நியமனம், இலாகா ஒதுக்குவதில் ரங்கசாமியிடமே விட்டுவிட்டால், அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும். ஆனால் பாஜவின் நடவடிக்கை இதற்கு நேர்மாறாக உள்ளது. மேலும் அடுத்த மாதம் வரை அமைச்சரவை விரிவாக்கத்துக்கு நேரம் உள்ளது. இப்போது அவசரப்படத்தேவையில்லை. கடந்த முறை 50 நாட்களுக்கு பிறகுதான் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. இந்த முறை அது போன்ற சூழல் இருக்காது. விரைவில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகள் சரி செய்யப்படும், என்றனர்.
