புதுடெல்லி: ஈரான் -அமெரிக்கா, இஸ்ரேல் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விமான எரிபொருள் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்களும் வழக்கமானதை காட்டிலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான இயக்கத்திற்கான செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைப்பதற்கு ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தனது சர்வதேச விமான சேவைகளில் 27 சதவீதம் குறைப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தது. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில்,‘‘2026ம் ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட்க்கு இடைப்பட்ட காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சேவைகளில் நாங்கள் ஏற்கனவே அறிவித்த மாற்றங்களின் தொடர்ச்சியாக அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களிலும் எங்கள் செயல்பாடுகளை தற்காலிகமாக முறைப்படுத்தி உள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா வாரத்திற்கு 3600 உள்நாட்டு விமான சேவைகளில் அடிப்படையில் பார்க்கும்போது இந்த 22 சதவீதக் குறைப்பு என்பது சுமார் 790க்கும் மேற்பட்ட சேவைகள் குறைக்கப்படும்.
