டெல்லி: எரிபொருள் விலை உயர்வால் உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் இந்த விமான நிறுவனம், தனது சர்வதேச விமான சேவையை ஏற்கனவே சுமார் 27 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் விமான எரிபொருள் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் வழக்கத்தை விட நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதால் விமான இயக்க செலவுகள் உயர்ந்துள்ளன.
தற்போது வாரத்திற்கு சுமார் 4,400 விமானங்களை இயக்கும் நிலையில் இப்போது சுமார் 3,600 விமானங்கள் உள்நாட்டிலும் மீதமுள்ள 800 விமானங்கள் சர்வதேச சேவைகளாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இதனிடையே ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதம் வரை சர்வதேச சேவைகளில் முன்னர் அறிவித்திருந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை குறைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.
