சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்த நிலையில் மூன்று தொகுதிகள் காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது. மேலும், ராஜினாமா ஏற்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளது. இந்தநிலையில் மேலும் ஒரு எம்எல்ஏ நேற்று ராஜினாமா செய்தார். இன்னும் 6 எம்எல்ஏக்களிடம் பேரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்டமுடியாமல் போய்விட்டது. இதையடுத்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுக்கும் சமயத்தில் எதிர்க்கட்சியான திமுகவுடன் சேர்ந்து தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் 58 பேர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டனர்.
இதன் காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பு சமயத்தில் 171 உறுப்பினர்கள் மட்டுமே அவையில் இருந்தனர். அதில், 144 பேர் ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் (எடப்பாடி தரப்பு), 5 பேர் நடுநிலையாகவும் (பாஜ – பாமக) வாக்களித்தனர். இதன் மூலமாக தவெக அரசு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துவிட்டது. இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவளித்த 144 பேரில் 25 பேர் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களாவர்.
அதிமுக கொறடாவை மீறி செயல்பட்டதால் கடந்த 13ம் தேதி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பாஸ்கர் உள்ளிட்ட 29 பேரை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி அதிரடியாக நடவடிக்கை எடுத்தார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி அணி என்றும், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி என்றும் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதன் பின்னர், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் போன்றோர் கனவு பலிக்காமல் போனது.
இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்தவர்கள் மீண்டும் எடப்பாடியுடன் இணைய முயன்று வந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாகவும் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
இவை ஒருபுறம் இருக்க நேற்று காலை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த தலைவர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை எடப்பாடி அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், இன்பதுரை எம்பி ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற குழு தலைவர், கொறடா ஆகியோரின் உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறியது தொடர்பான அதிமுக மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ராஜினாமா முடிவை எப்படி சபாநாயகர் ஏற்கலாம். எனவே, அந்த 3 எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை ஏற்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர். இதனால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இருந்தபோதிலும், இந்த சந்திப்பிற்கு முன்னதாகவே 3 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவித்து அதனை அரசிதழாக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அதிமுக வேலுமணி அணியில் இருந்து மேலும் 7 எம்எல்ஏக்களுக்கு 20 சி மற்றும் வாரிய தலைவர் பதவி வழங்குவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா டைப் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்துடன் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்துப் பேசினார். அந்த கடிதம் டைப் செய்யப்பட்டிருந்ததால், அதை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். லெட்டர் பேடில் கைப்பட எழுதி கொடுத்தால் மட்டுமே ஏற்க முடியும் என்றார். இதனால் அவர் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக் கொண்டார். மாலையில் அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இசக்கி சுப்பையா, கான்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். நெடுஞ்சாலைகளில் கான்ட்ராக்ட் எடுத்து வருகிறார். தவெக ஆட்சியில் அவருக்கு தென் மாவட்ட கான்ட்ராக்ட் முழுவதும் ஒதுக்கி கொடுக்கப்படும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தவெக கட்சியில் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் 6 எம்எல்ஏக்கள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக குதிரை பேரத்தை ஆதரிப்பதோடு, லாட்டரி பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது. இதனால் சிபிஐ விசாரணை கேட்டு நீதிமன்றத்தை நாட எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில் ஒன்றிய அரசு, குதிரை பேரம் நடக்கும் போது தானாக முன் வந்து விசாரணை நடத்துவார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் குதிரை பேரம் நடப்பதாக எல்லோரும் கூறி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு அமைதியாக இருப்பது அனைவரையும் சந்தேகப்பட வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 234 இடங்கள் உள்ளன. தவெகவில் 107 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் 5 பேர், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தலா 2 பேர் வீதம் ஆதரவு தெரிவிப்பதால், 120 பேர் ஆதரவு ஏற்பட்டது. அமமுக உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து ஆதரவு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்தது. இந்தநிலையில் வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் அவர்கள் தவெகவில் சேர்ந்தனர். ஆனாலும் அவர்கள் 4 பேர் ராஜினாமா செய்தது, விஜய் ஏற்கனவே ராஜினாமா செய்தது என 5 பேர் ராஜினாமாவால், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது.
தற்போதைய நிலையில், மெஜாரிட்டிக்கு 115 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. இதனால்தான் மேலும் 6 முதல் 7 பேரை ராஜினாமா செய்ய வைக்க தவெக தீவிரமாக முயன்று வருகிறது. அவர்கள் ராஜினாமா செய்தால், தற்போதைய எண்ணிக்கையில் அடிப்படையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே தனித்து ஆட்சி அமைத்து விட முடியும் அல்லது காங்கிரசை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சி அமைத்து விட முடியும் என்று விஜய் கருதுகிறார். தமிழக அரசியலில் இந்த பரமபத விளையாட்டு மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
