சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா எந்த விதத்திலும் மீறக்கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான ‘பூமி பூஜை’ நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்திற்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 16.2.2018 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களை தவிர்த்து, காவிரி ஆறு அல்லது அதன் துணை நதிகளின் குறுக்கே வேறு ஏதேனும் புதிய திட்டத்தைத் திட்டமிடுவது, மேற்குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தலையிடுவதற்கு சமமானதாகும்.
மேகதாது திட்டப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல கர்நாடக மாநிலம் மேற்கொள்ளும் முயற்சி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் செயலாகும். இத்தகைய சூழலில், 16.2.2018 தேதியிட்ட தீர்ப்பை அதன் எழுத்துப்பூர்வ மற்றும் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இணங்கச் செயல்படுத்தும் கடமை கொண்ட ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும் மற்றும் மத்திய நீர்வள ஆணையமும் தமிழ்நாடு அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்காமலேயே, கர்நாடகாவின் மேகதாது திட்ட முன்மொழிவை ஏற்றுப் பரிசீலித்து வருவது வியப்பளிக்கிறது.
இச்சூழலில், மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான திட்ட அறிக்கையானது 5.2.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணைக்கும், 16.2.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், அத்திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும், படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
