திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே 17 வயது சிறுவன் ஒட்டி சென்ற கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்து கூடப்பட்டு பகுதியை சேர்ந்த சந்துரு சென்னையில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளுடன், மௌனிஷ் என்ற 11 வயது மகனும் இருந்தார். பள்ளி விடுமுறையில் மூன்று பிள்ளைகளும் தந்தையை காண சென்னைக்கு சென்றுள்ளனர். பின்னர், மூன்று பிள்ளைகளை ரயிலில் ஏற்றி ஜோலார்பேட்டைக்கு அனுப்பியுள்ளார்.
இவர்களை அழைத்து வர பிள்ளைகளின் தாத்தாவான பெருமாள் இரு சக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். மூன்று பேரையும், இருசக்கர வாகனத்தில் ஏற்றிகொண்டு, வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதே நேரத்தில் தஞ்சை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தனது உறவினரை காண வாணியம்பாடிக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அவர் எதிரே வந்த பெருமாளின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியதில் அதில் பயணம் செய்த 4 பேரும் தூக்கி எறியப்பட்டனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் தாத்தாவும், சகோதரிகளும் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்ததை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதனிடையே விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல்துறை, விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கைது செய்து, அவர் மது அருந்தியுள்ளாரா என்பதை பரிசோதிக்க அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையின் முடிவில், அவர் மது அருந்தி வாகனத்தை இயக்கியது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
