×

குன்னூரில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை; ஓட்டுப்பட்டறையில் திடீரென வீடு இடிந்து விழுந்து விபத்து: பெண் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

 

குன்னூர், மே 26: குன்னூரில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் வீடு இடிந்தது. அதில் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், சாலைகள் மற்றும் நடைபாதைகளும் வெள்ளத்தில் மிதந்தன. இந்த தொடர் மழையின் காரணமாக குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் வசித்து வரும் தனலட்சுமி (44) என்பவரது வீட்டின் ஒரு பகுதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்து நடந்த சமயத்தில் தனியாக வசித்து வரும் தனலட்சுமி வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. வீடு இடியும் பயங்கர சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அலறியடித்தபடி தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறினார். உடனடியாக அவர் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்தார். இச்சம்பவம் குறித்து நேற்று காலை வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு கருதி விபத்து நடந்த பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்பொழுது நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

Tags : Coonoor ,Ottupattara ,Nilgiris district ,
× RELATED மலை பயிர்கள் கண்காட்சியின் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?