- உச்ச நீதிமன்றம்
- சிபிஐ
- கரப்பன்புச்சி
- எங்களுக்கு
- மகாராஷ்டிரா
- புது தில்லி
- கரப்பன்புச்சி ஜனதா கட்சி
- தலைமை நீதிபதி
புதுடெல்லி: இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதள பக்கத்தின் நிறுவனருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்திய சில வார்த்தைகளை உத்வேகமாகக் கொண்டு, பாஸ்டன் பல்கலைக்கழக மாணவர் அபிஜீத் திப்கே என்பவரால் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) என்ற நையாண்டி பக்கம் இணையத்தில் தொடங்கப்பட்டது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், ஊழல் மற்றும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வரில் இளைஞர்கள் கரப்பான் பூச்சி போன்று உடையணிந்து நூதன போராட்டங்களை நடத்தினர். குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் 2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைப் பெற்று, ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விட இந்த பக்கம் பிரபலமடைந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வலைகளைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் இந்த அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டது. இந்த இணையப்பக்கத்தின் அசாதாரண வளர்ச்சியால் அதன் நிறுவனர் அபிஜீத் திப்கேவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்காவில் தங்கியிருக்கும் திப்கே, இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில், தலைமை நீதிபதியின் கருத்துக்களை வணிக ரீதியாகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ராஜா சவுத்ரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், இந்த அமைப்பின் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஒன்றிய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் மற்றும் கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர், இவர்களைப் பின்தொடருபவர்களில் பெரும் பகுதியினர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், இது இந்தியாவின் இளைஞர்களை திசைதிருப்பும் எல்லை கடந்த சதி என்றும் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்த திப்கே, ‘எங்களைப் பின்தொடருபவர்களில் 94 சதவீதம் பேர் இந்தியர்கள் தான். ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய இளைஞர்களை ஏன் பாகிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்துகிறார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்பிக்கள் சசி தரூர், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசின் முடக்க நடவடிக்கையை கண்டித்துள்ள நிலையில், இந்த அமைப்பின் பெயரில் போலியான உறுப்பினர் சேர்க்கை லிங்குகளை அனுப்பி பொதுமக்களின் வங்கி விவரங்களை திருடும் மோசடிகள் நடப்பதாக பஞ்சாப் போலீசார் எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
