×

ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலி

 

திருமலை: ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து பகல் நேரங்களில் அதிகளவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகள், விலங்குகளும் பாதிப்படைந்து வருகின்றனர்.

அவ்வாறு ஒருங்கிணைந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பண்ணைகளில் 4 நாட்களில் 18 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் வெப்ப அலையால் உயிரிழந்ததாகவும், இதனால் ரூ.54 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாநில கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1.20 கோடி வரையிலான முட்டையிடும் கோழிகள் உள்ளன. அவை ஒரு நாளைக்கு ஒரு கோடி முட்டைகள் வரை இடுகின்றன. இந்த மாதம் 20ம் தேதி முதல் அதிகரித்து வரும் வெப்பநிலையால் பண்ணைகளில் கோழிகள் அவதிப்படுகின்றன.

தீவனத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் விலைகள் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளன. கோடை வெப்பம், நஷ்டத்தை சந்தித்து வரும் கோழி வளர்ப்புத்தொழிலை மேலும் சேதப்படுத்துகிறது. பண்ணைகளில் உள்ள கோழிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க, கொட்டகைகளில் நீர்த் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. கொட்டகையின் உள்ளே வெப்பநிலை உயர்வதை தடுக்க, தண்ணீரைத் துளித்துளியாகத் தெளிக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கொட்டகையைச் சுற்றி துணிகளும் சாக்குப்பைகளும் கட்டப்பட்டு தண்ணீரில் நனைக்கப்படுகின்றன. மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு செய்தும், அதிக வெப்பநிலையால் கோழிகள் இறப்பதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இறக்கும் கோழிகளுக்கு காப்பீடு இல்லாததால், இந்தத் தொழில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

40 ஆண்டுகளாக கோழி வளர்ப்புத் துறையில் இருந்தும் இதற்கு முன்பு இவ்வளவு கடுமையான வெப்பத்தை கண்டதில்லை. கோழிகள் செத்து மடிகின்றன. பெரும் இழப்பும் ஏற்படுகிறது. மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார். மேலும் இறந்த கோழிகளை வேறு வழியின்றி பண்ணையாளர்கள் குழி தோண்டி புதைக்கின்றனர்.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Badala Subba Reddy ,general secretary ,Poultry Farmers Association ,
× RELATED தெருநாய்களை அப்புறப்படுத்தும்...