×

மேட்ரிமோனி, டேட்டிங் தளங்கள் மூலம் 21 பெண்களை ஏமாற்றிய ‘டுபாக்கூர்’ எஸ்ஐ கைது: குஜராத் போலீசார் அதிர்ச்சி

அகமதாபாத்: மேட்ரிமோனி மற்றும் டேட்டிங் தளங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி 21 பெண்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு என்ற ராக்கி பஞ்சால் (30), பல்வேறு மேட்ரிமோனி மற்றும் டேட்டிங் தளங்களில் போலி கணக்குகளை தொடங்கி, தன்னை குஜராத் மாநில போலீசாரின் சைபர் கிரைம் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகக் கூறி பெண்களிடம் பழகி வந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போலீஸ் சீருடையில் இருப்பது போன்ற போலி புகைப்படங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் பணி நியமன ஆணைகளை உருவாக்கி பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

பின்னர், தனக்கு சட்டப் பிரச்னைகள் இருப்பதாகவும், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, பெண்களை உணர்வுப்பூர்வமாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். வருமான வரி சோதனை அறிவிப்புகள் மற்றும் வங்கிக் கணக்கு முடக்கம் போன்ற போலியான ஆவணங்களை காட்டி, அகமதாபாத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் பாரத் படேல் கூறுகையில், ‘21 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த புகாரின் பேரில் ராக்கி பஞ்சால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே மகாராஷ்டிராவில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

Tags : MATRIMONI ,DUBACORE ,GUJARAT ,Ahmedabad ,Raki Panchal ,Ahmedabad, ,Ahmedabad, Gujarat ,
× RELATED கட்டிட வேலை செய்வதுபோல் நடித்து போதை...