×

லஞ்சம் தொடர்பாக புகார் தெரிவித்தால் 1 லட்சம் சன்மானம் எனும் பொய்:‘தலைவலி தைல’ நிறுவனத்திற்கு ‘தலைவலி’ ஏற்படுத்திய தவெகவினர்: பொய் செய்தியால் வந்த வினை

 

சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதலே அந்தக் கட்சிக்கு ஆதரவாகச் சமூக வலைதளங்களில் ஏராளமான பொய்களைப் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக விஜய்யை ஆதரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை அப்படியே நம்பும் சூழல் உள்ளதைப் பார்க்க முடிகிறது.

அப்படி தவெகவை ஆதரிப்பவர்களை மைய்யப்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு உண்மை போன்று, பொய்களைப் பரப்பி வருகிறார்கள். சில புகைப்படங்களில் அரசின் சின்னத்துடனும் அந்த பொய்கள் பரப்பப்படுகிறது. அந்த பொய்கள் எல்லாமும் விஜய் நல்ல ஆட்சியை வழங்கி வருகிறார், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறார் என்று இல்லாத ஒன்றைக் கட்டமைக்கும் வகையிலானவை.

இந்நிலையில், சில நாட்களாக தவெக ஆதரவு சமூகவலைதளப் பக்கங்களில் ‘‘எந்த அரசு துறையாக இருந்தாலும் உங்களிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டால்கூட ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால், புகார் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நேர்மையான தமிழ்நாடு, ஊழலற்ற நிர்வாகம், அனைவருக்கும் சமமான சேவை’’ என்ற தகவல்களுடன் கூடிய ஒரு புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது. அதில் புகார் அளிப்பதற்கான தொடர்பு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதில் முதல்வர் விஜய்யின் புகைப்படமும் தமிழ்நாடு அரசின் சின்னமும் உள்ளது.

ஆனால், உண்மையில் விஜய் தலைமையிலான அரசு இப்போதுவரை அப்படியான எந்த அறிவிப்பையும் வழங்கவில்லை. மேலும், அதில் அவர்கள் கொடுத்துள்ள தொடர்பு எண் திருநெல்வேலியை மைய்யமாகக் கொண்டு இயங்கும் தலைவலி தைலம், இனிப்புகள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பொய் செய்தியை உண்மை என நம்பிய பலர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டதால் சில நேரங்களில் அந்த நிறுவனம் தொலைபேசியை அணைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே வைக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு வரும் ஒவ்வொரு அழைப்புக்கும் இது லஞ்ச ஒழிப்புத்துறையின் எண் இல்லை எனவும் இது தலைவலி தைலம் தயாரிக்கும் நிறுவனத்தின் எண் எனவும் நிறுவனத்தின் சார்பில் சொல்கிறார்கள். மேலும், இதுகுறித்து புகார் அளித்து எண்ணை மாற்ற உதவி செய்யுமாறு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறார்கள்.

தவெகவினரின் இந்த செயல் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொய்யான புகைப்படத்தை உருவாக்கியவர்கள் அந்த தொடர்பு எண்ணையும் பொய்யாக உருவாக்கி இருக்கலாம் என சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மேலும், விஜய் தலைமையிலான அரசு தங்களுக்கு ஆதரவாகப் பொய் செய்திகளை வெளியிடும் சமூக வலைதளப் பக்கங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்படுகிறது.

Tags : Thavekas ,Thalaivali Thala ,Chennai ,Vijay ,Tamil Nadu Vetri Kagamagam government ,
× RELATED ‘நீட்’ வினாத்தாள் கசிவு...