சேலம்: சேலத்தில் பிளஸ் 2 மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட விஏஓவுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். இதில் காயமடைந்த விஏஓ, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் எருமாப்பாளையம் பகுதியில், கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த ஒருவர், வாகனத்தை நிறுத்தி, மாணவியை ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது அந்த நபர் அந்த மாணவியிடம் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த மாணவி, சுதாரித்து கொண்டு அந்த நபரை ‘பளார்’ என்ற கன்னத்தில் அறைந்ததுடன் உதவி கேட்டு சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் அந்த நபரின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த நபரை நைய புடைத்தனர். தர்ம அடி வாங்கிய நபரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர், தனது செல்போனில் 108 ஆம்புலன்சை அவரே அழைத்துள்ளார். ஆம்புலன்ஸ் வந்ததும், காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவியிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் எருமாப்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்(43) என்பதும், இவர் வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
