நொய்டா: உத்தரபிரதேசத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) மூலம் மத்திய ஆயுத காவல் படை, செயலக பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றுக்கான கான்ஸ்டபிள் ஜி.டி. தேர்வு மற்றும் ரைபிள்மேன் தேர்வு-2026 ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறி, ஒரு நபரிடம் 4 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள பாலாஜி டிஜிட்டல் சோன் எனும் தேர்வு மையத்தில் ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பிரதீப் சவுகான், அருண் குமார், சந்தீப் பாதி, நிஷாந்த் ராகவ், அமித் ராணா, ஷாகிர் மாலிக் மற்றும் விவேக் குமார் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் ரொக்கம், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் தேர்வு மையத்தில் இருந்த சர்வருக்குள் ஊடுருவி புராக்ஸி சர்வர் ஒன்றை நிறுவி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளது. திரையை பகிரும் மென்பொருள் மூலம் வினாத்தாள்களை வெளியே உள்ள நிபுணர்களுக்கு அனுப்பி, அவர்கள் மூலமாக விடைகளை பெற்று தேர்வர்களுக்கு ஆன்லைனில் பதில் அளித்து வந்துள்ளனர்.
பிரதீப் சவுகான் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததும், எடியூகுவிட்டி நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடு நடந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீட்-யுஜி 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது எஸ்.எஸ்.சி. தேர்விலும் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளில் இக்கும்பல் இதே முறையைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளதா என்பது குறித்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் இத்தகைய கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
