×

முன்னாள் அமைச்சர் மீதான விசாரணை: அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை: முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 2.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக 2006ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து கண்டறிய 2021ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு 1 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சொத்துக்களையும், பின்னர் சென்னை, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள 1.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியது.

கடந்த ஆண்டு மார்ச் 28ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அது இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போது அமைச்சர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசின் அனுமதி தேவை என்பதால், பாரதிய சட்டப்பிரிவு 218-ன் கீழ் 4 பக்க கடிதத்தை அமலாக்கத்துறை கடந்த 20ம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ‘பிரசாத் ஆச்சாரியா’ வழக்கின் தீர்ப்பையும் இதில் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், 5 நாட்களுக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் மீது இந்த இரண்டாவது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், ‘கடிதம் கிடைத்த 120 நாட்களுக்குள் மாநில அரசு விசாரணைக்கு அனுமதி தர வேண்டும்’ என்றும், தவறும் பட்சத்தில் அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கடிதங்களும் பெறப்பட்டதை அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. 120 நாட்களுக்குள் அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Enforcement Department ,Government of Tamil Nadu ,Chennai ,Former Minister ,Anita Radhakrishnan ,Tamil Nadu Anti-Money Laundering Department ,
× RELATED உயிலை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்...