சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்தாலே தற்காலிக சான்றிதழை உடனே வழங்கவும், முழு ஆய்வுக்குப் பின்னர் நிரந்தர சான்றிதழ்கள் வழங்கவும் மருத்துத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
“மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், தேனாம்பேட்டை அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய சுகாதாரக் குழும கலந்தாய்வுக் கூடத்தில் 21.05.2026 அன்று மாநில அளவிலான இணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம், மருத்துவம். மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ் அவர்கள் தலைமையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களை உரிய மரியாதையுடன் அணுகி தேவையான சேவைகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், “காயகல்ப்” தரச் சான்றிதழுக்கான ஆய்வுகள் ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (Quarterly) ஆய்வு செய்து சான்றிதழ்கள் வழங்கிடவும் தேங்கியுள்ள 8000 CEA (தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் உரிமம்) சான்றிதழ்களுக்கு. ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவேற்றம் (Upload) செய்தால் தற்காலிக சான்றிதழ்கள் உடனடியாக வழங்கி, முழுமையான ஆய்வுக்குப் பின்னர் நிரந்தர சான்றிதழ்கள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது என “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
