×

செவ்வாய் தோஷமா?

ஜோதிடத்தில் ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் “செவ்வாய் தோஷம்’’ என்று கருதப்படுகிறது. செவ்வாய்க்குரிய காரகம் எப்படி வேலை செய்யும் என்பதை, இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும். செவ்வாய் அமர்ந்த நட்சத்திர சாரம், செவ்வாயைப் பார்த்த கிரகங்கள் சேர்ந்த என பல விஷயங்கள் இதில் உண்டு. எனவே 7ல் செவ்வாய் இருந்தாலே செவ்வாய் தோஷம் என்று ஜாதகத்தைத் தூக்கிப் போட்டு விடக்கூடாது. செவ்வாயின் பலத்தையும் பலவீனத்தையும் கவனிக்க வேண்டும். செவ்வாய் தசை வருகிறதா என்று பார்க்க வேண்டும். செவ்வாய் சுபர்களால் பார்க்கப்படுகிறாரா சேர்க்கை பெற்றிருக்கிறாரா என்பதையும் பார்க்க வேண்டும். இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன.
ஆனால், எது எப்படி இருந்தாலும், சில பாவங்களில் (Bhavam-அதனதன் தன்மை) சில கிரகங்கள் அமரும் பொழுது, அதற்குரிய காரக குணங்களைக் காட்டத்தான் செய்கின்றது.
செவ்வாய் வீரியமுள்ள கிரகம். கம்பீரமான கிரகம். வேகமான கிரகம். உஷ்ண கிரகம். இந்த கிரகம் எழில் அமரும் பொழுது துணையுடன் வாக்குவாதங்கள் அல்லது பிடிவாத குணம் கட்டாயம் இருக்கும். தைரியமாகப் பழகுவார்கள், ஆனால் பகைவர்கள் உருவாக வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட், பாதுகாப்புத் துறை அல்லது இயந்திரங்கள் தொடர்பான தொழில்கள் லாபம் தரும். ஒரு ஜாதகம். கன்னி லக்கனம். 7ல் செவ்வாய் ராகு கூட்டணி. அதாவது மீனத்தில் ராகு செவ்வாய். திருமணமாகி இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கிறது.
இங்கு கவனிக்க வேண்டியது, செவ்வாய் ஏழில் அமர்ந்தது மட்டுமல்ல. அது பிடிவாதத்தைக் கொடுக்கும். பிடித்த படியை விடாமல் இருக்கச் செய்யும். அதனால் இந்த விவாகரத்து அல்ல. கன்னி லக்கினத்திற்கு மூன்று எட்டுக்குரியவர் செவ்வாய் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அஷ்டமாதிபதி மற்றும் மாரகாதிபதி செவ்வாய், ராகுவோடு சேர்ந்து ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதால் வந்த விளைவு இது. இதில் 7க்குரிய செவ்வாய் தோஷமும் சேர்ந்து கொண்டது. அதனால் விளைவு தீவிரமாகியது. அதோடு ராகு இங்கே செவ்வாயோடு இணைந்து இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி புதன் 7ல் என்ன செய்வார் என்று பார்ப்போம். இளமையான, அறிவார்ந்த துணை அமைவார். நகைச்சுவை உணர்வு மற்றும் பேச்சுத் திறமை போன்ற விஷயங்கள் திருமண வாழ்வை இனிமையாக்கும். பொதுமக்கள் தொடர்பு நன்றாக இருக்கும். சிறந்த பேச்சாளராகவும், ஆலோசகராகவும் மக்கள் மத்தியில் திகழ்வார்கள். வியாபாரம், கணக்கு வழக்கு, தரகு மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பெரும் வெற்றி பெறுவார்கள். ஆனால், புதனுக்கும் 7ம் இட அமைப்பில் ஒரு முக்கியக் குறிப்பு பார்க்க வேண்டும். உபய லக்கினங்களுக்கு ஏழாம் இடத்தில் புதன் அமரும் பொழுது, அவருக்கு இரண்டு தோஷங்கள் வந்து சேருகின்றன. ஒன்று கேந்திராதிபத்திய தோஷம். இரண்டாவதாக உபய லக்கினத்திற்கு ஏழாம் இடம் பாதகஸ்தானம் என்பதால், திருமணத்தில் தாமதமோ அல்லது திருமணமான பிறகு கருத்து வேறுபாடுகளோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதை சமாளிக்கும் அமைப்பில், வேறு கிரக இணைவுகள் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதோடு புதன்திசை புத்தி நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். புதன் ஐந்தாம் அதிபதியோடு சம்பந்தப்பட்டால், காதல் திருமணத்திற்கும் வாய்ப்புண்டு. மீன லக்கினம். 4,7க்குரிய புதன் 5ல். லக்னாதிபதி குரு லக்கினத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக புதனைப் பார்ப்பதால், புதனுக்கு 1, 5, 7 தொடர்பு ஏற்பட்டு காதல் திருமணத்தில் முடிந்தது.
இனி குரு, 7ம் இடத்தில் என்ன செய்வார் என்று பார்ப்போம். குரு புத்திரகாரகன் என்பதால், குரு ஏழாம் இடத்தோடு தொடர்பு கொள்ளும் பொழுது, மங்கள கரமான திருமணத்தை கட்டாயம் நடத்தி வைப்பார் என்பதால், திருமணத்திற்கு குரு பார்வையை முக்கியமாகச் சொன்னார்கள். குரு 7ல் அமர மிகச் சிறந்த வாழ்க்கை துணை அமைவார். வசதியான குடும்ப வாழ்க்கை அமையும். சமூகத்தில் மதிப் பிற்குரிய நபராக இருப்பார்கள். ஒரு வழிகாட்டியாகத் திகழ்வார்கள். வங்கி, கல்வித்துறை அல்லது ஆன்மிகம் சார்ந்த தொழில்கள் அமோகமாக இருக்கும். ஆனால், இவரும் புதன் போல உபய லக்கினங்களுக்கு பாதகத்தையும், சில நேரங்களில் செய்வார். சிலருக்கு திருமண வாழ்க்கையை அமைய விடாமல் செய்துவிடுவார்.
கும்ப லக்கனம். சிம்மத்தில் குரு. 7ம் இடத்தில் குரு அமர 19 வயதில் நல்ல முறையில் திருமணமாகி, நல்லபடியாக இருந்து வருகிறார். திருமணமாகி 39 ஆண்டுகள் ஆகிறது. கும்ப லக்கினத்திற்கு தனலாபாதிபதி குழு ஏழில் அமர்ந்ததால், இந்த நன்மை கிடைத்தது. மீன லக்கினமாக இருந்தாலும், தனுசு லக்கினமாக இருந்தாலும், மிதுன லக்கினமாக இருந்தாலும், கன்னி லக்னமாக இருந்தாலும், இந்த அமைப்பை குருவிடம் எதிர்பார்க்க முடியாது. அடுத்து சுக்கிரன் 7ல் அமர, காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம். வசதியான, அழகான துணை மற்றும் மகிழ்ச்சியான இல்லறம் அமையும்.
பெண்களால் ஆதரவும், கலைத்துறையில் புகழும் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள், ஆடை, ஆபரணம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் வெற்றி. சனி 7ல் அமர, திருமணம் தாமதமாகலாம். வயதில் மூத்தவராகவோ அல்லது மிகவும் முதிர்ச்சியானவராகவோ துணை இருப்பார். கடமை உணர்வு அதிகம் இருக்கும். அடிமட்டமக்களிடம் நல்ல தொடர்பு இருக்கும். ஆனால், ஆரம்பத்தில் அவமானங்களைச் சந்திக்க நேரலாம். இரும்பு, எண்ணெய், பழைய பொருட்கள் அல்லது உழைப்பு சார்ந்த தொழில்களில் நிரந்தர வருமானம் வர வாய்ப்புண்டு.
ராகு 7ல் அமர, கலப்புத் திருமணம் அல்லது எதிர்பாராத விதமாகத் திருமணம் அமையலாம். துணையைப் புரிந்து கொள்வதில் சிக்கல்கள் வரலாம்.
அரசியலில் குறுக்கு வழியில் வெற்றி பெற வைக்கும். நவீன தொழில்நுட்ப தொடர்பு கிடைக்கும். ஏற்றுமதி – இறக்குமதி, வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் ரசாயனத் தொழில்கள் வாய்ப்பு அதிகம். கேது 7ல் அமர, துணையுடன் ஆன்மிகத் தொடர்பு இருக்கும். ஆனால் லௌகீக சுகங்களில் ஈடுபாடு குறையலாம். சிலருக்குப் பிரிவினை உணர்வு ஏற்படலாம். தனிமையை விரும்புவார்கள்.
பொது வெளியில் ஒதுங்கியிருக்க நினைப்பார்கள். ஒரு ரிஷப லக்ன ஜாதகம். ஏழில் அதாவது விருச்சிக ராசியில் ராகு சனி இருக்கிறார்கள். ராகு ஏழில் இருப்பதால், துணையைப் புரிந்து கொள்வதில் சிரமம். ஒருவருக் கொருவர் புரிந்து கொள்வதில் தடை இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் ஏழில் ராகு. சனியும் சேர்ந்திருப்பதால், திருமணம் மிகத் தாமதமாக நடந்தது. 1956-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, 1995ல் கிட்டத்தட்ட, 39 வயதில் திருமணம் நடந்தது. சனி ஏழில் அமர்ந்ததால், இந்தத் தாமதத்தைக் கொடுத்தது. ராகு அமர்ந்ததால், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை ஓடுகிறது. இனி எட்டாம் பாவம் என்ன செய்யும் என்று பார்ப்போம்.

Tags : Mars ,
× RELATED உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்…