×

பிரார்த்தனை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

பிரார்த்தனை எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

​பிரார்த்தனை என்பது உலகிலேயே மிக வலிமையான ஆற்றல். மொழி மாறினாலும், தேசம் மாறினாலும், பிரார்த்தனை என்பது எல்லா சமயங்களுக்கும் பொதுவான ஒரு விஷயமாக இருக்கிறது. வாழ்வில் சோதனைகளும், சவால்களும் வரும்போது, நம்மை வீழ்ந்து விடாமல் தாங்கிப் பிடிக்கும் சக்தி, பிரார்த்தனைக்கு உண்டு. இது நமக்கு அமைதியையும், துணிவையும், சரியான வழிகாட்டுதலையும் வழங்குகிறது.
“பீதக ஆடை பிரானார் பிரம்ம குருவாகி வந்து’’ என்பார் பெரியாழ்வார். பகவான் எனக்கு குருவாக வந்து வழி காட்டினான் என்று பொருள். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பெரியாழ்வார் குறிப்பிடுவது போல, இறைவன் எப்போதும் தன் திவ்ய ஆயுதங்களோடு, புராணங்களில் வருவது போன்ற உருவத் தோடுதான் வரவேண்டும் என்பதில்லை. ஏனெனில் அவன் எங்கும் நிறைந்திருப்பவன்.
ஒருக்கால் அப்படி வந்தாலும் அவன்தான் இறைவன் என்பதைக் கண்டு பிடிக்கக்கூடிய ஆற்றல் நமக்கு இல்லை. ஆதிசங்கரருக்கு, கங்கைக்கரையில், நான்கு நாய்களுடன் ஈஸ்வரன் வந்த கோலத்தைப் பார்த்து, அவன்தான் பார்வதி பரமசிவனா என்று திகைக்கும் படியாகச் செய்தவன் தானே அவன். இறைவன் பிரம்ம குருவாக வருகிறான் என்பது, அவன் ஒரு ஞானமாகவோ அல்லது சரியான நேரத்தில் நமக்குக் கிடைக்கும் ஒரு நல்வழிகாட்டியாகவோ வருகிறான் என்பதையே குறிக்கிறது.
“அண்டமாம் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரமசோதி’’ என்பார் திருமங்கை ஆழ்வார்.
“அங்கிங்கெனாதபடி எங்கும்
பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்பார்’’ தாயுமானவர். எங்கும் நிறைந்தவன் இந்த உருவத்தில்தான் வரவேண்டும் என்பது இல்லை.
இறை வருகையையும் பிரார்த்தனைக்கான அவன் பதிலையும் நாம் பின்வரும் கோணங்களில் பார்க்கலாம்:
* நமக்குத் தெரியாத ஒரு நபர் மூலமாக வரும் உதவி.
* சரியான நேரத்தில் நம் மனதில் தோன்றும் ஒரு நல்லெண்ணம் அல்லது எச்சரிக்கை.
* தற்செயலாக நாம் வாசிக்கும் ஒரு புத்தகம் அல்லது கேட்கும் ஒரு சொல் தரும் தீர்வு.
இவை அனைத்துமே இறைவன் தன் கோலத்தை மாற்றி நமக்காகச் செய்யும் உதவிகள்தான். உருவங்களைக் கடந்து, நம் உள்ளுணர்வாக (Intuition) இருந்து எது சரி, எது தவறு என்று நமக்கு உணர்த்திக் கொண்டே இருப்பதே அந்தப் பரம்
பொருளின் பெரும் கருணை. நாம் ஒவ்வொரு நாளும் செய்யும் பிரார்த்தனையால் கிடைக்கும் மிகச் சிறந்த பலன் இதுதான். பிரார்த்தனை என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் ஒரு பேரொலி. பிரார்த்தனை என்பது நாம் மட்டும் கடவுளிடம் பேசுவது அல்ல; அது நமக்கும் இறைவனுக்கும் இடையிலான இருவழி உரையாடல். நாம் பேசும்போது நம் குறைகளையும், நன்றிகளையும் சமர்ப்பிக்கிறோம். நாம் அமைதியாக இருந்து கவனிக்கும்போது, இறைவன் நம் உள்ளுணர்வு மூலமாகவோ அல்லது வாழ்வின் நிகழ்வுகள் மூலமாகவோ நமக்குப் பதிலளிக்கிறான்.
இது ஆன்மாவின் தாகம் அல்லது ஏக்கம் போன்றது. ஒரு குழந்தை தன் தாயிடம் பேசுவதைப் போன்ற மிக நெருக்கமான தொடர்பு பிரார்த்தனையின் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. பிரார்த்தனை என்பது பலவீனமான நேரங்களில் நமக்குக் கிடைக்கும் ஊன்றுகோல் மட்டுமல்ல, அது நம் ஆன்மாவை இறைவனுடன் பிணைக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத தங்கச்சங்கிலி. இறைவனுக்கும் நமக்கும் இடையிலான இந்தத் தொடர்பில், எந்தவிதமான தங்குதடைகளோ அல்லது இடைத்தரகர்களோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெளிவேஷங்களோ, சடங்குகளோ இன்றி உண்மையான பக்தியுடன் அணுகும்போது அங்கே குறுக்கீடுகள் மறைந்துவிடும். இதயத்தின் குரல் நேரடியாகப் பிரபஞ்சத்தின் பேராற்றலோடு இணைய வேண்டும். இடையில் சந்தேகம், பயம் அல்லது அகங்காரம் போன்ற குறுக்கீடுகள் இல்லாதபோதுதான் பிரார்த்தனை முழுமையடைகிறது. பிரார்த்தனை செய்யும் விஷயத்தில் பல நேரங்களில் நாம் முறையாகப் பிரார்த்தனை செய்ய முடியாமல் தவிக்கிறோம். இதை அருளாளர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவமாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
“சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க…… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேசனித்த தமியன்’’
– என்று அருணகிரிநாதர் தன்னால் அரை நிமிடம்கூட பிரார்த்தனை செய்ய முடிவதில்லையே என்று கதறுகிறார்.
உண்மையில் அருணகிரிநாதர் மூடர் அல்ல; அவர் ஒரு மகாகவிஞர் மற்றும் ஞானி. இருப்பினும், இறைவனின் பேராற்றலோடு ஒப்பிடும்போது, ஒரு மனிதனின் அறிவு எவ்வளவு சிறியது என்பதையும், உலக விஷயங்களில் மனம் சிதறுவது எவ்வளவு பெரிய பலவீனம் என்பதையும் உணர்த்தவே இப்படிப் பாடுகிறார். நம் மனம் ஒரு குரங்கைப் போன்றது; அது ஒரு நொடியில் பல இடங்களுக்குத் தாவும். அரை நிமிடம் என்பது மிகச் சிறிய கால அளவு. ஆனால், அந்தச் சிறிய நேரத்தைக்கூட இறைச் சிந்தனையில் முழுமையாகச் செலவிட முடியாமல் இந்த `மாயை’ நம்மைத் தடுக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். இதே கருத்தை திருமங்கை ஆழ்வாரும்,
“உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசையில் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்புபோலக்
குழையுமால் என்-தன் உள்ளம்
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம்
தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர் உம்மை அல்லால்
எழுமையும் துணை இலோமே’’
– என்று திருக்குறும்தாண்டகத்தில் பாடுகிறார்.
பிரார்த்தனை எப்படிச் செய்ய வேண்டும் என்கிற அறிவையும், நுட்பத்தையும், நாம் பெறுவதற்கும் இதே பிரபஞ்சத்திடம் பிரார்த்திக்க வேண்டும். “அவன் அருளால் அவன் தாள் வணங்கி’’ என்பார்கள். உன்னுடைய திருவடிகளில் வழிபாடு செய்யும் நல்லறிவைக் கொடு, உன்னிடம் மனம் லயித்து வழிபடும் படியான நல்லறிவைக் கொடு என்று முதலில் இறைவனிடம் அருளாளர்கள் பிரார்த்திக்கிறார்கள். அருளாளர்கள் நமக்குக் காட்டிய அந்தப் “பிரார்த்தனை ரகசியங்களை’’ மூன்று முக்கிய நிலைகளாகப் பிரிக்கலாம்.
* நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்ற சிறுமையை உணர்ந்து, “எல்லாம் அவனது செயல்’’ என்று முழுமையாக ஒப்படைப்பதுதான் முதல் படி.
* இறைவனை நெருங்கிய உறவாகப் பாவிப்பதே பிரார்த்தனையை எளிதாக்கும். பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாகப் பார்த்தார். சுந்தரர் இறைவனைத் தோழனாகப் பார்த்தார். அபிராமிபட்டர் அன்னையாகப் பார்த்தார். உரிமையோடு, அன்போடு, ஒரு குழந்தையைப் போல அழுது கேட்பது இறைவனின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும்.
* அருணகிரிநாதர் “சடகசட மூட மட்டி’’ என்று தன்னைத் தாழ்த்திக் கொள்வது, தன் அகங்காரத்தைக் கரைக்கத்தான். “நான் பெரியவன், நான் இவ்வளவு செய்திருக்கிறேன்’’ என்ற எண்ணம் இருக்கும் வரை பிரார்த்தனை பலிக்காது.
தன்னை ஒரு கருவியாக மட்டும் கருதி, அந்தப் பேராற்றலிடம் மண்டியிடும்போது, அங்கே பிரார்த்தனை இருவழி உரையாடலாக மாறுகிறது. பிரார்த்தனை என்பது கடவுளுக்கு நாம் கொடுக்கும் வேலைப் பட்டியல் அல்ல. அது நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொண்டு, அந்தப் பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்துக் கொள்ளும் ஒரு இசைவு.
அந்தப் பக்குவம் வந்துவிட்டால், நாம் கேட்காமலேயே நமக்குத் தேவையானவை நம்மைத் தேடி வரும்.

Tags :
× RELATED உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்…