×

நமக்கு தீமை செய்யும் ஒரு குணத்தை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?

ஆர்த்திப் பிரபந்தம் என்பது வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகள் அருளிய மிக உருக்கமான ஒரு நூலாகும். ‘ஆர்த்தி’ என்றால் ‘துன்பம்’ அல்லது ‘வருத்தம்’ – ‘ஏக்கம்’ என்று பொருள்.
மணவாள மாமுனிகள் அருளிய ஆர்த்தி பிரபந்தத்தில் இரண்டு விஷயங்கள் காட்டப்படுகின்றன.
*எம்பெருமானாரின் திருமேனியை அனுபவித்து மங்களாசாஸனம் பண்ணுவது,
* எம்பெருமானாரைப் பிரிந்து வாழ முடியாமல் அவரைச் சென்று உடனே அடைய ஆசைப்பட்டுக் கதறுவது.
இந்தப் பிரபந்தத்தின் சில பாசுரங்களை, வைணவ ஆலயங்களில் , வழிபாட்டு நிறைவாக ஓதப்படும் சாற்றுப் பாசுரங்களாகச் சேர்த்து ஓதுவார்கள். தினசரி திருவாராதனத்திலும் தென்கலை சம்பிரதாயத்தில் இந்தப் பாசுரங்களுக்கு ஒரு ஏற்றம் உண்டு. ராமானுஜர் ஜெயந்தி அன்று இந்தப் பாசுரங்களை சேவிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதில் கீழே உள்ள பாசுரத்தைச் சேவித்துக்கொண்டிருந்தேன்.
தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே.
அடியேன் எப்பொழுது பாசுரங்களைச் சேவித்தாலும் (பாடினாலும் ஓதினாலும்), அதன் அர்த்தத்தை இன்றைய வாழ்வியலோடு நினைத்துப்பார்ப்பதே வழக்கம்.
நம்முடைய இன்றைய வாழ்வுக்கு ஏதாவது ஒரு செய்தி அந்தப் பாசுரங் களில் இருக்கிறதா என்று பார்ப்பேன். ஏதாவது ஒரு வரி அல்லது ஒரு சொல் என்னுடைய சிந்தனையை சுழலச் செய்யும். அப்படித்தான் இந்தப் பாசுரங்களின் கடைசி வரியில் என் சிந்தனை நின்றது.
மாமுனிகள் தான் அடைந்த பற்பல நன்மைகளைச் சொல்லிக்கொண்டே வருகின்றார். எதனால் தனக்கு இத்தனைச் சந்தோஷம், பெருமை என்பதை அடுக்கிக் சொல்லிக்கொண்டே வருகின்ற பொழுது, கடைசி வரியில் இப்படி முடிக்கிறார்.
“பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே”.
மற்றவர்களுடைய பெருமையைக் கண்டால் அதற்காகப் பொறாமைப்படும் குணம் இல்லாமல் ஆகப்பெற்றோம் என்று முடிக்கிறார்.
என்ன அழகான உளவியல்? நம்முடைய ஆன்மிகம் எத்தனை அற்புதமாக வாழ்வியலைச் சொல்லித் தருகிறது.
அனேகமாக 100க்கு 90 பேர் ஏதோ ஒரு மனச்சிக்கல், கவலையோடு இருக்கின்றனர். அவர்களிடம் எத்தனைப் பொருள்கள் இருந்தாலும், ஆடம்பரங்கள் இருந்தாலும், பணவசதி இருந்தாலும், ஏதோ ஒரு பொருள் இல்லாத குறை அவர்களிடத்திலே இருந்து கொண்டே இருக்கிறது. இந்தக் குறை எங்கே இருந்துவருகிறது என்பதை கவனித்தால், அதன் வேர், வந்து நிற்கும் இடம்தான் அழுக்காறு.
40 இலட்சம் ரூபாய்க்கு ஒரு கார் வாங்கி இருந்தாலும் கூட, நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர் 45 லட்ச ரூபாய் கார் வாங்கி விட்டால், நமக்கு சட்டென்று, ஒரு ஊசி உள்ளே இறங்கி குத்துவதை, நம்மால் தவிர்க்க முடியவில்லை.
தன் இலையைப் பார்த்து உண்பதை விட, அடுத்த இலையைப் பார்த்து உண்ணாமல் இருப்பவன்தான் அதிகம்.
அடுத்த இலையில், கூடுதலாக விழுந்த ஏதாவது ஒன்று, அந்த நேரம் உண்ணும் மகிழ்ச்சியைச் குறைக்கிறது.
இந்த மோசமான குணத்தை அழுக்காறு என்று திருவள்ளுவர் தம்முடைய குறட்பாக்களில் பயன்படுத்துகின்றார்.
அழுக்காறு என்பது பிறருடைய உயர்வையோ, செல்வத்தையோ, அறிவையோ கண்டு பொறாமைப்படும் மனநிலை.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு.
ஒருவன் தன் ஒழுக்க நெறியாகவே ‘பொறாமை கொள்ளாமையைக் கொள்ள வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். பொறாமை இல்லாமல் வாழ்வது என்பது பெருமைக்குரிய வாழ்வு என்கிறார் மாமுனிகள்.
பொறாமை இல்லாமல் அதாவது அழுக்காறு இல்லாமல் வாழ்வது என்பது எளிதான செயல் அல்ல.
பொறாமைதான் வந்துவிடுகிறதே, அது இல்லாமல் எப்படி வாழ முடியும் என்று நினைக்கலாம்.
பொறாமை என்பது இயல்பாக எல்லாருக்கும் வரத்தான் செய்யும். ஆனால், இந்தக் குணம் தமக்கு மிகப்பெரிய கேட்டினைத் தரும், தன்னை சந்தோஷமாக இருக்கக் கூடாது, என்று நினைத்து,மனதில் இந்த எண்ணம் உருவாகும் பொழுதே தடுத்து விடவேண்டும்.
பொறாமை உள்ளவனுக்கு வேறு எதிரிகளே தேவையில்லை, அந்தப் பொறாமையே அவனை அழித்துவிடும்.

மன அழுக்கின் விளைவுகள்

ஒப்பிடுதல் (Comparison)
மற்றவர்களிடம் இருப்பதை நம்மிடம் இல்லாததோடு ஒப்பிடும் போதுதான் அழுக்காறு பிறக்கிறது. இது நம்மிடம் இருக்கும் நன்மைகளை நாம் ரசிக்கவிடாமல் தடுத்துவிடுகிறது.

நிறைவின்மை
எவ்வளவு வசதிகள் இருந்தாலும், அடுத்தவர் உயர்வைப் பார்த்து மனம் வருந்துவதால் எப்போதும் ஒருவிதப் பதற்றமும் கவலையுமே மிஞ்சும்.

ஆரோக்கியபாதிப்பு
அக்னி நட்சத்திர வெயிலைப் போல, பொறாமை என்பது மனதைச் சுட்டெரிக்கும். இது மனஅழுத்தத்தையும், உடல் ரீதியான சோர்வையும் உண்டாக்கும். பொறாமை என்பது அடுத்தடுத்து சில விஷயங்களைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கும். அது நம் வாழ்க்கையிலே மிகப் பெரிய சிக்கலை உண்டாக்கும்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.ஒரு மனிதனின் வீழ்ச்சி எப்படிப் படிப்படியாக நிகழ்கிறது என்பதை குறளில் சொல்லப்பட்ட இந்த வரிசைமுறை மிகத் துல்லியமாக விளக்குகிறது.
முதலில் ஒப்பிடுதல் தொடங்குகிறது. “அவனிடம் அது இருக்கிறது, என்னிடம் இல்லையே” என்ற அழுக்காறு மனதில் தோன்றியவுடன், அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற அவா (பேராசை) பிறக்கிறது. அடுத்தவன் உயர்வைக் கண்டு பொறாமைப்படுபவன், அதைத் தானும் அடையத் துடிக்கும்போது நியாயமான ஆசை பேராசையாக மாறுகிறது.
பேராசைகொண்ட ஒருவன் தான் நினைத்ததை அடைய முயற்சிக்கும்போது, அதில் ஏதேனும் தடை ஏற்பட்டாலோ அல்லது தான் விரும்பியது கிடைக்காமல் போனாலோ அவனுக்குள் பெரும் வெகுளி (கோபம்) வெடிக்கிறது. ஆசை நிறைவேறாத இடத்தில் விரக்தி பிறக்கிறது, அந்த விரக்தியின் வெளிப்பாடே சினம்.
கோபம் தலைக்கேறும்போது மனிதன் தன் நிதானத்தை இழக்கிறான். நிதானம் இழந்த நிலையில், நாவடக்கம் இன்றி மற்றவர் மனம் புண்படும்படியான இன்னாச் சொற்களை (வசவுச் சொற்கள்) கொட்டுகிறான். தீயினால் சுட்ட புண் ஆறும், ஆனால் இந்தச் சினத்தினால் கொட்டிய இன்னாச்சொற்கள் ஏற்படுத்திய வடு ஆறாது.

இந்தச் சங்கிலித் தொடரின் விளைவு
* மன அழுத்தம்.
* அமைதியின்மை
*வெகுளி மற்றும் இன்னாச்சொல் இது உறவுகளையும் கௌரவத்தையும் அழிக்கும்.பொறாமை வரத்தான் செய்கிறது. நம்முடைய மனநிம்மதியை எப்படியும் குறைத்துவிடும் என்கின்ற பொறாமையை உடனே விரட்டி விட வேண்டும் அல்லவா? நமக்கு தீமை செய்யும் ஒரு குணத்தை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?

Tags : Vainava ,Arthi Prapantha ,
× RELATED பெரிதினும் பெரிதாக விளங்கும் அம்பிகை