×

மீண்டும் மீண்டுமா.! வாக்குறுதியை காற்றில் பறக்க விடும் விஜய் அரசு.. மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ஆம் இடம்…

சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக இன்று 23 அமைச்சர்கள் பதவியேற்று கொள்ளும் விழா நடைபெற்று வரும் சூழலில், மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளி வந்த மாதரம் பாடலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வராக விஜய் மற்றும் அவருடன் சக தவெக எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொள்ளும் விழாவின் போதும் வந்தே மாதரம் பாடல் முதலாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாகவும் பாடப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது, இதனை தொடர்ந்து இனி தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும், இனி இந்த தவறு நடக்காது என்று விஜய் தலைமையிலான அரசு கூறியது.

ஆனால் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று தவெக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொள்ளும் விழாவில் முன்பு நடந்ததை போலவே தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளி, மீண்டும் வந்தேமாதரம் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் கொதிப்படைய செய்துள்ளது.

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்த் தாய் வாழ்த்து 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவினால் தவெக அரசு அளிக்கும் வாக்குறுதிகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Vijay government ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Cabinet ,
× RELATED அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு திருமாவளவன் வருகை