சென்னை, மே 19: இனிமேல் குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் தானாகவே வாட்ஸ்அப்பிற்கு வரும்படி சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதில் அடுத்தகட்ட பாய்ச்சலாக, ‘முன்கூட்டியே கணிக்கும் நிர்வாகம்’ என்ற புதிய பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், சென்னையில் குழந்தை பிறந்தவுடன், அதற்கான பிறப்புச் சான்றிதழ் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக நேரடியாக, தானாகவே பி.டி.எப் வடிவில் அனுப்பப்படும். சென்னை மாநகராட்சி நிர்வாகம் இச்சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, இரண்டு முக்கிய வழிகளில் பொதுமக்கள் சான்றிதழைப் பெற வழிவகை செய்துள்ளது.
அதாவது, மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடன், அந்த விவரங்கள் மாநகராட்சிப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு, மாநகராட்சி அமைப்பிலிருந்து தானாகவே பிறப்புச் சான்றிதழ் பிடிஎப் வடிவில் வாட்ஸ்அப்பில் சென்றடையும். பொதுமக்கள் இதற்கு தனியாக விண்ணப்பிக்கவோ, அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ தேவையில்லை. ஒருவேளை பெற்றோருக்கு வாட்ஸ்அப் செய்தி வராமல் விடுபட்டிருந்தாலோ அல்லது எப்போது வேண்டுமானாலும் சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்ய நினைத்தாலோ, அதற்கும் எளிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணான 9445061913 என்பதற்கு ஒரு எளிய குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம், தங்களது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை சில நொடிகளில் வாட்ஸ்அப்பிலேயே நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பொதுவாக ஒரு சான்றிதழ் தேவைப்பட்டால், பொதுமக்கள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைனிலோ விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த ‘முன்கூட்டியே கணிக்கும் நிர்வாக’ முறையில், பொதுமக்களின் தேவையை அரசு முன்கூட்டியே அறிந்து, அவர்கள் கேட்காமலேயே தகுதியான சேவையை நேரடியாக வழங்கும். இது நிர்வாகத் திறனை மேம்படுத்துவதோடு, மக்களுக்கும் அரசுக்குமான இடைவெளியைக் குறைக்கிறது.
குறிப்பாக, சான்றிதழ் பெற யாருக்கும் லஞ்சம் கொடுக்கவோ, இடைத்தரகர்களை அணுகவோ தேவையில்லை. இதனால் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களுக்கு அலைவது, நீண்ட வரிசையில் நிற்பது மற்றும் சான்றிதழ் நகல் எடுக்க அலைவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் இந்த டிஜிட்டல் முயற்சி, இந்தியாவின் மின் ஆளுமை திட்டங்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.
