புதுடெல்லி: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் குறைந்த செறிவூட்டப்பட்ட யூரேனியம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. பொருளாதார தடை மற்றும் இறக்குமதி வரிவிதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக குறைத்தது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் தொடுத்ததன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதனை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தற்காலிகமாக அனுமதி அளித்தது. மார்ச் மாத நடுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் மீ்ணடும் தடையை விலக்கி தற்காலிக அனுமதியை அமெரிக்கா வழங்கியது.
ரஷ்யாவில் கடலில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெயை விநியோகிக்கவும் வாங்குவதற்கும் இரண்டாவது முறையாக மே 16ம் தேதி வரை அமெரிக்கா தடையை விலக்கி கொண்டு இருந்தது.
இந்நிலையில் இந்த தடை விலக்கு அவகாசம் காலாவதியாகி உள்ளது. ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அனுமதியை அமெரிக்கா நீட்டிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ‘‘அமெரிக்கா விலக்கு அளிப்பதற்கு முன்பும் விலக்கு அளிக்கப்பட்டபோதும் இப்போதும் நாங்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் முடிவுகள் முதன்மையாக வணிக காரணங்கள் மற்றும் போதுமான விநியோக இருப்பை அடிப்படையாக கொண்டவையாகும். கச்சா எண்ணெய் விநியோகத்தில் பற்றாக்குறை இல்லை. நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலமாக போதுமான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்டாலும் சரி, அளிக்கப்படாவிட்டாலும் சரி கச்சா எண்ணெய் கிடைப்பதை அது பாதிக்காது. வணிக ரீதியான சாத்தியக்கூறு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தேவைகளின் அடிப்படையில் தொடர்ந்து இந்தியா வாங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
