×

பெட்ரோல் செலவை குறைக்க குதிரையில் பயணித்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்…

கார்வா: எரிபொருள் விலை உயர்வு குறித்த கவலை நாடு முழுவதும் நிலவும் நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், இருசக்கர வாகனத்திற்குப் பதிலாகக் குதிரையில் சவாரி செய்து கவனத்தை ஈர்த்து உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் அரசு ஆசிரியராகப் பணியாற்றுபவர் 43 வயதான முன்னா பிரசாத் குப்தா. இவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு பதிலாக குதிரையில் பயணித்து சென்றார்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காணப்படும் நிலையில் ஆசிரியர் முன்னா பிரசாத் தான் வசிக்கும் பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசை போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டார். எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு மத்தியில், அவர் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நின்று நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க நினைத்தார். இந்த ஆசிரியர் தன் தந்தையிடமிருந்து குதிரையேற்றத்தை சிறுவயதிலேயே கற்று கொண்டிருந்ததாலும், அவரது குடும்பம் பாரம்பரியமாக குதிரைகளை வளர்த்து வந்ததாலும், வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக குதிரையை பயன்படுத்த முடிவெடுத்தார்.

வெள்ளை சீருடை மற்றும் அரசு வழங்கிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொப்பியை அணிந்து கொண்டும், கணக்கெடுப்புக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பையை முதுகில் மாட்டி கொண்டும் ஒரு பழுப்பு நிற குதிரையில் பயணித்தார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” நான் வசிக்கும் பெட்ரோல் எளிதாக கிடைக்கவில்லை; எரிபொருள் வாங்க நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பது இப்போது இயல்பாகிவிட்டது.

எனவே, வரிசைகளில் நின்று நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, ஒரு மாற்று வழியைக் கண்டறிய நினைத்தேன். எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளாகவே இந்த குதிரை இருந்து வருகிறது; எனவே பணிக்கு இந்த குதிரையிலேயே செல்லலாம் என்று நான் முடிவு செய்தேன்.” என்று குறிப்பிட்டார்.

Tags : Karwa ,Jharkhand ,Jharkhand… ,
× RELATED கர்நாடகாவில் யானை விழுந்ததில் சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி