அரியலூர், மே 18: அரியலூர் நகராட்சி மற்றும் அரியலூர் நகராட்சியை சுற்றி உள்ள ஊராட்சிகளில் உள்ள ஏரி, குளங்களில் மழைக்கு முன் வண்டல் மண்களை அகற்ற வேண்டி உள்ளதால் உடனடியாக அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பொது மக்கள் வண்டல் மண் வெட்டி எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். ஏரி,குளங்களில் கோடை காலங்களில் வண்டல் மண் பொதுமக்கள் எடுத்து கொள்ள இலவச அனுமதி கடந்த பத்து ஆண்டாக வழங்கப்படுகிறது.
இதனால் மழை காலங்களில் ஏரி, குளங்களில் அதிக நீரை தேக்க முடியும். வண்டல் மண் எடுக்க எந்த எந்த ஏரி, குளம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுமதி அளித்து உத்தரவு வரும். அந்த உத்தரவை அடுத்து வருவாய் துறைக்கு பொதுமக்கள் விவசாயிகள் விண்ணப்பித்து அவர்கள் தேவைக்கு இலவசமாக வெட்டி எடுத்து கொள்ள வருவாய் துறை அனுமதி அளிப்பார்கள்.
இந்தாண்டு தேர்தல் நடத்ததால் அனைத்து துறை அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதால் அரியலூர் நகராட்சியிலும் மற்றும் சுற்றி உள்ள ஊராட்சிகளில் இந்த ஆண்டு இன்னும் வண்டல் மண் பொதுமக்கள் எடுத்து கொள்ள அனுமதி அளிக்கவில்லை. அரியலூர் நகராட்சி பட்டு நூல்காரன் ஏரி, அரசற்றான் ஏரி , குறிஞ்சான் குளம் ஏரி, செட்டேரி பல்லேரி , சந்தன ஏரி , ஐப்பனேரி பல ஏரிகள் 50 ஆண்டாகவே வண்டல் வெட்டி அகற்றவே இல்லை. அரியலூர் புறவழி சாலைகளில் உள்ள பல ஏரிகள் வண்டல் மண் அகற்றாமல் தூர்த்து போய் உள்ள பல ஏரிகள் உள்ளன. அவைகளையும் மேலேம் பல ஏரிகளில் வண்டல் அகற்ற உடனடியாக மாவட்ட ஆட்சியர் அனுமதி பொதுமக்களுக்கு, விவசாயி களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
