×

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பைனல் சாத்விக், சிராக் தோல்வி: இந்தோனேஷிய வீரர்கள் சாம்பியன்

 

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி இணை, இந்தோனேஷிய வீரர்களிடம் தோல்வியை தழுவினர். தாய்லாந்தின் பாங்காக் நகரில், தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை இந்தோனேஷியாவை சேர்ந்த லியோ ராலி கார்னான்டோ, டேனியல் மார்தின் இணையுடன் மோதியது.

துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிக் குவிப்பில் ஈடுபட்ட இந்தோனேஷிய வீரர்கள், முதல் செட்டை 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினர். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இந்திய வீரர்கள் சுதாரித்து ஆடியபோதும், கடைசியில் 25-23 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை இந்தோனேஷிய வீரர்கள் கைப்பற்றினர். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் இந்தோனேஷியா வீரர்கள் வெற்றி வாகை சூடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். சாம்பியன் பட்டம் பெற்ற இந்தோனேஷிய வீரர்களுக்கு கோப்பையும், ரூ. 35 லட்சம் பரிசுத் தொகையும் கிடைத்தது. 2ம் இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு, ரூ. 18 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

Tags : Thailand Open badminton men ,Satwik ,Chirag ,Bangkok ,Chirag Shetty ,Sairaj Rankireddy ,Thailand Open badminton ,Thailand Open ,Bangkok, Thailand ,
× RELATED பஞ்சாப் அணியை 23 ரன்கள்...