×

பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் உடல்நசுங்கி பலி

புதுவை: புதுவை அருகே அதிவேகமாக வந்த தமிழக அரசு ஏசி சொகுசு பேருந்து, பைக் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து காரணமாக இசிஆரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்ரி மகன் சிலம்பரசன் (29), திருமணம் ஆகவில்லை. இவருக்கு கையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிலம்பரசனுக்கு மாவு கட்டு போடுவதற்காக இன்று காலை புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதிக்கு சிலம்பரசனின் அக்கா கணவர் ஸ்டாலின் (37) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.

சிலம்பரசனின் மற்றொரு அக்கா கணவர் கார்த்திகேயன் (33) என்பவரும் அவர்களுடன் பைக்கில் வந்துள்ளார். பெரியமுதலியார் சாவடி கலால் சோதனை சாவடி அருகே இன்று காலை மூவரும் வந்து கொண்டிருந்தபோது பின்னால் தமிழ்நாடு அரசு ஏசி சொகுசு பேருந்து சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்தது. எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக பேருந்து மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் கார் இடது பகுதியில் இருந்த ஒரு காலி மனையில் புகுந்து நின்றது. அடுத்து அதே பேருந்து ஸ்டாலின் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

இதில் பைக்கில் இருந்த மூன்று பேரும் பேருந்தின் முன்பக்க பகுதி அடியில் சிக்கினர். மேலும் மூன்று பேரையும் மோட்டார் சைக்கிள் உடன் சேர்த்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பேருந்து இழுத்துச்சென்றது. அதில் மூன்று பேரும் பேருந்து அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியாயினர். உடனே பேருந்தை ஓட்டிவந்த முருகேஸ்வரன் (30) என்பவர் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவர் புதுவை உருளையன்பேட்டை போலீசில் சரணடைந்தார்.

விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புதுச்சேரி கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு மூன்று உடல்களையும் அனுப்பி வைத்தனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் சிக்கி மூன்று பேர் பலியான சம்பவம் அறிந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த காரில் பயணம் செய்த ஹைதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர்கள் ஐந்து பேருக்கு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதில் சம்பத் போய்னி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பத் போய்னி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அதிகாலை 4.00 மணிக்கு நடந்த இந்த கோர விபத்தால் சென்னை புதுச்சேரி இடையே இசிஆரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Puducherry ,Tamil Nadu government ,ECR ,Villupuram… ,
× RELATED சேலம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே...