×

இயற்கை 360°

நன்றி குங்குமம் தோழி

இழந்ததை மீட்கும் இலந்தை

‘‘செக்கச் சிவந்த பய(ழ)ம்…
இது தேனாட்டம் இனிக்கும் பய(ழ)ம்…
எல்லோரும் வாங்கும் பய(ழ)ம்…
இது ஏழைக்கினே பொறந்த பய(ழ)ம்…
ஏ… எலந்தப் பய(ழ)ம்…
எலந்தப் பய(ழ)ம்…”

எல்.ஆர்.ஈஸ்வரியம்மாவின் தனித்துவமான கனீர் குரலில் துள்ளலோடு ஒலித்த இந்த ‘எலந்தப் பய(ழ)ம்’ பாடலைக் கொண்டாடாதவர்களே இல்லை எனலாம்.
உண்மையிலேயே கோடை காலத்தின் நீர் வறட்சியைப் போக்கி, புத்துணர்ச்சி தந்து, தேன் போல இனிக்கும் இந்த எளிய பழத்தை நாம்தான் கொண்டாடாமல் விட்டுவிட்டோமா என்பதை அறிந்துகொள்ள, ‘இழந்ததை மீட்கும் இலந்தை’யுடன் பயணிப்போம் வாருங்கள்..!

Jujubes, Tsao (Zao), Juju, Kulab, Sedra, Chinese dates, Red dates என பலவாறு அழைக்கப்படும் இலந்தைப் பழத்தின் தாவரப்பெயர் Zizyphus jujuba மற்றும் Zizyphus mauritiana. தோன்றிய இடம் சீனா மற்றும் இந்தியா.

தன்னிச்சையாக வளரும், கூரிய முட்கள் நிறைந்த இதன் மரங்களில் காய்க்கும் சிறிய, பழுப்பு நிற புளிப்புப் பழத்தை இலந்தை என நாம் அழைப்பதுபோல, கோற்கொடி, கோல், வதரி, குல்லதி எனும் பழம் தமிழ் பெயர்களும் இதற்குண்டு. பிற மாநிலங்களில் பெர், பதரி, போகரி, ரெகு பண்டு, போர் ஹன்னு என அழைக்கின்றனர். சிறிய பழுப்பு நிற உருண்டை வடிவ இலந்தை நாட்டு இலந்தை அல்லது புளி இலந்தை என்றும், சற்றே பெரிதான நீளமான வகை சீமை இலந்தை அல்லது சீன இலந்தை என்றும், கரிய நிறத்தில் காணப்படும் சிறிய வகையினை, காட்டு இலந்தை எனவும் வகைப்படுத்துகின்றனர்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள இந்த இலந்தையின் பழம், இலைகள், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டவை. குறிப்பாக, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சேர்ந்ததொரு தனிச்சுவை கொண்ட இலந்தைப்பழம் ஆச்சர்யமூட்டும் குணங்களை கொண்டது.இலந்தை பழத்தில் அதிக கலோரி, அதிக நார்ச்சத்து, அதிக நீர்த்தன்மை, புரதச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் C இதில் செறிந்து காணப்படுவதால், ‘King of Vitamin C’ என்றும் போற்றப்படுகிறது.

மேலும், வைட்டமின்கள் A, B, E மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், பாஸ்ஃபரஸ் உள்ளிட்ட கனிமச்சத்துகளும், அத்தியாவசிய அமினோ அமிலங்களும், கொழுப்பு அமிலங்களும் இதில் நிறைந்துள்ளன. குறிப்பாக, ட்ரைடெர்பினிக் அமிலங்கள், ஃபீனாலிக் அமிலங்கள், சப்போனின்கள், செரிப்ரோசையிட்கள், கட்டச்சின் மற்றும் குவர்செட்டின்உள்ளிட்ட தாவரச்சத்துகள் இலந்தையின் மருத்துவ குணங்களுக்கு காரணமாக இருக்கின்றது.

நெடுந்தூரப் பிரயாணங்களின்போது வரும் வாந்தி, தலைச்சுற்றலுக்கு பெரிதும் உதவும் இலந்தை, வயிற்று அழற்சி, செரிமானமின்மை, குடல் நோய்கள், மலச்சிக்கல், பித்த நோய்களுக்கும், கல்லீரல் மற்றும் கணைய அழற்சி நோய்களுக்கும் அருமருந்தாக விளங்குகிறது. உடல் பருமனைக் குறைக்க உதவும் இலந்தை, சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட வாழ்க்கை முறை நோய்களுக்கு பயன்படுகிறது.

ஹார்மோன் சுரப்பை சீராக்கி, கருவுறுதல் விகிதத்தையும் அதிகரிப்பதுடன், பெண்களின் மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தின் போது தோன்றும் உபாதைகளை குறைத்து,
அதீத உதிரப்போக்கை தடுக்கவும் பயன்படுகிறது.நோயெதிர்ப்பு திறன், ரத்த விருத்தி, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை, இதய பாதுகாப்பு, சிறுநீரகப் பாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு என பல்வேறு பலன்களை தருவதுடன், வயோதிகத்தில் ஏற்படும் தோல் சுருக்கங்களை தடுத்து சருமத்துக்கு அழகையும் மென்மையையும் கூட்டுகிறது.

இதன் கனிம மற்றும் தாவரச் சத்துகள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன. ‘Jujuboside A’ என்ற இலந்தையின் தாவரச்சத்து, மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியை தூண்டுவதால் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மன அமைதியையும் இது தூண்டுவதால் சீன மருத்துவத்தில் மனப்பதற்றம், மன அழுத்தம், பயத்தைப் போக்கவும் பயன்
படுத்தப்படுகிறது.

எனினும், அதிக அளவில் இலந்தைப் பழத்தை உட்கொண்டால் வயிற்று உபாதைகள் ஏற்படுவதுடன், சிலருக்கு ஒவ்வாமையும் தோன்றும். இலந்தை பழம் எளிதாக பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவதால், நாட்டு இலந்தை வகையை உரித்துப் பார்த்து உட்கொள்வதே எப்போதும் நல்லது.‘இலந்தை வடை’ யில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு கலந்த பழத்தின் சுவையோடு, உப்பும், காரமும் சேர்ந்து நாவில் நீர் சுரக்க வைக்கும். சீமை இலந்தையின் ஜூஸ், கேக், ஜாம், சாக்லேட், ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்க உலகெங்கும் பயன்படுகிறது.

சீனர்கள் இலந்தையை அதிர்ஷ்டம் தரும் பழமாகவும், கருவுறுதலுக்கான பழமாகவும் கருதுவதுடன், அவர்களின் விருப்ப உணவாகவும், மருந்தாகவும் திகழும் இதனை, ‘Hong Zao Jiu’ எனும்
மதுபானம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். இலந்தைப் பழச்சாறு அல்லது தேநீர் கொரியாவில் விருந்தினரை வரவேற்கும் முக்கிய பானமாக விளங்குகிறது.இலந்தை மரத்தை சிடர் அல்லது உன்னப் என வழங்கும் இஸ்லாமியர்கள், ரமலான் நோன்பின் போது பேரீச்சை அளவிற்கு இதனை கொண்டாடி மகிழ்கின்றனர். அரேபிய நாடுகளில், குறிப்பாக சராவட் பள்ளத்தாக்கில் அதிகம் காணப்படும் இலந்தை, ‘சொர்க்கத்தின் மரம்’ என குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடவு செய்த ஓராண்டுக்குப் பிறகு காய்ப்புக்கு வரும் இலந்தை, ஏறக்குறைய 20 ஆண்டுகள் வரை காய்க்கும் திறன் மிக்கது. வறட்சியான நிலப்பரப்பில் தன்னிச்சையாக வளரும் நாட்டு வகை தவிர்த்து, பனாரஸி, கோலா, உம்ரான் உள்ளிட்ட ரகங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. பல்வேறு ஊட்டச்சத்துகளோடு, குறைந்த விலையில் ‘ஏழைகளின் பழம்’ என்கிற அடைமொழியோடு வலம் வரும் இலந்தையினை கிவி, பெர்ரி போன்ற விலைமிக்க வெளிநாட்டு பழங்களின் வருகையால் நாம் இழந்துவிட்டோம் என்பதே நிதர்சனம். நாம் இழந்தது இலந்தையை மட்டுமல்ல… அது தரும் உயரிய குணங்களையும்தான். கோடையை குளிர்ச்சியாக்க இழந்த இலந்தையை மீட்டெடுப்போம் வாருங்கள்..!

(இயற்கை பயணம் நீளும்…)

Tags : Chekach Sivanda Paya ,elanda ,L. R. ,Kaneer ,Ishwaryamma ,
× RELATED ராஜ்குமார் ராவ் ஃபிட்னெஸ் சீக்ரெட்!