×

365 நாளும் பிங்க் ஐ பரவும்

நன்றி குங்குமம் தோழி

வெயில் காலம் வந்துவிட்டாலே வைரஸ் மற்றும் பாக்டீரியா ெதாற்று நோயின் பாதிப்பு ஏற்படும். அதனை கஞ்ஜக்டிவைடிஸ் என்று மருத்துவ துறையில் குறிப்பிடுவார்கள். பெரும்பாலும் வெயில் காலத்தில் கண்களில் ‘மெட்ராஸ் ஐ’ ஏற்படும். ஆனால், இந்த பாதிப்பு குறிப்பிட்ட ஒரு சீசனில்தான் வரும். மெட்ராஸ் ஐ போலவே ‘பிங்க் ஐ’ என்ற தொற்று இப்போது கண்களில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமில்லாமல் வருடத்தில் எப்போது வேண்டுமென்றாலும் பாதிக்கலாம் என்கிறார் கண் மருத்துவர் ஷிபு வர்கே.

‘‘கண்களில் ஏற்படும் தொற்று என்றால் அது மெட்ராஸ் ஐயினைதான் நாம் குறிப்பிடுவோம். அதற்கு ஒரு குட்டி வரலாற்று கதை இருக்கு. மெட்ராஸ் ஐ என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து ஆங்கிலேய வீரர்கள் மெட்ராஸுக்கு வந்த போது சீதோஷ்ணநிலை மாற்றம் காரணமாக அவர்களின் கண்களில் தொற்று ஏற்பட்டது. கண்கள் சிவப்பாகி தண்ணீர் வழிந்தது. அந்த தொற்றுக்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிட்டார்கள். ஆனால், இன்று கண்களில் வைரஸ் காரணமாக தொற்று ஏற்படுகிறது. மெட்ராஸ் ஐ போல் அதன் பாதிப்பு இருந்தாலும், இதனை ‘பிங்க் ஐ’ என்று குறிப்பிடுகிறோம்.

இந்த பாதிப்பினை மெட்ராஸ் ஐ என்று நினைத்துக் கொள்கிறார்கள். மெட்ராஸ் ஐ பாக்டீரியாவில் ஏற்படும் தொற்று. பிங்க் ஐ பாதிப்பு வைரஸால் ஏற்படும். குறிப்பாக அடினோ வைரஸ். இதில் 27 வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு தொற்றினை ஏற்படுத்தும். மெட்ராஸ் ஐ என்பது பருவக்கால நோய். வெயில் மற்றும் மழைக் காலங்களில் ஏற்படும். ஆனால், பிங்க் ஐ எந்தக் காலத்திலும் வரலாம். மேலும் இந்தத் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால், மற்றொருவருக்கு எளிதாக பரவும்’’ என்றவர், அதன் அறிகுறிகள் குறித்து விவரித்தார்.

‘‘பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டால், ஆரம்பநிலையில் தொண்டை வலி இருக்கும். சிலருக்கு உடல்வலி மற்றும் ஜுரம் பாதிப்பும் இருக்கும். இந்த வைரஸ் தொண்டை மற்றும் மூக்குப் பகுதியினை முதலில் தாக்கும். அங்கிருந்து கண்களுக்கு பரவும். கண்கள் பிங்க் நிறமாக மாறும். கண்களில் வலி அதிகமாக இருக்கும். கண் இமைகள் வீக்கமடையும். காதுக்குப் பின்புறம் நெறி கட்டும். இந்த நோயின் பாதிப்பு மூன்று வாரங்கள் இருக்கும், பிறகு தானாகவே குணமாகிவிடும்.

சர்க்கரை நோய் மற்றும் வயதானவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இதனால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கருவிழியில் சின்னச் சின்ன கொப்புளங்கள் ஏற்படலாம். அதனால் கண்களில் உறுத்தல் மற்றும் கண் பார்வை மங்க வாய்ப்புள்ளது. நோயின் தாக்கம் குணமானதும் கொப்புளங்கள் மறைந்து பார்வையும் சரியாகும். சிலருக்கு கொப்புளங்கள் ஏற்பட்ட இடத்தில் தழும்பாக மாறும். அதுவும் ஆறு முதல் ஒரு வருடத்தில் மறைந்துவிடும்.

இந்த பிங்க் ஐ, மெட்ராஸ் ஐ நோயுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வேகமாக பரவும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களில் இருந்து வெளியாகும் தண்ணீர் மூலமாக இது எளிதாக பரவும். பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய டவல், சோப் அல்லது தலையணையினை மற்றவர்கள் பயன்படுத்தினாலோ அல்லது அதை தொட்ட கைகளால் அவர்களின் கண்களை தொட்டாலோ உடனடியாக இந்த நோய் பரவும். பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பார்ப்பதாலோ அருகில் அமர்ந்தாலோ இது பரவாது.

முக்கியமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் கைகளை கண்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இவர்கள் கண்களை தொட்ட கைகளால் மற்ற இடங்களை தொடும் போதும், அதன் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கண்களை தொட்டால் உடனடியாக தங்களின் கைகளை சானிடைசர் அல்லது சோப்பால் உடனடியாக கழுவிட வேண்டும். மேலும் இந்த நோய் அதிகமாக பரவும் இடம் நீச்சல் குளம். வெயில் காலத்தில் பலரும் நீச்சல் குளத்திற்கு செல்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நீச்சல் அடிக்கும் போது அவர்களின் தொற்று தண்ணீர் மூலமாக மற்றவர்களுக்கும் பரவும்’’ என்றவர், கண்களில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

‘‘உடலில் பாதிப்பு ஏற்பட்டால் யாரும் முதலில் மருத்துவரை அணுகுவதில்லை. மாறாக அருகில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவார்கள். கண்ணில் பாதிப்பு ஏற்பட்டாலும், அங்கு சென்று சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அது தவறு. பெரும்பாலும் கண்களுக்கு ஸ்டீராய்ட்ஸ் டிராப்ஸினைதான் அவர்கள் பரிந்துரைப்பார்கள். ஸ்டீராய்ட்ஸ் வைரஸின் அமைப்பில் மாறுதல் ஏற்படுத்தும்.

இதனால் நோயின் தன்மை தீவிரமாகும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவித ஸ்டீராய்ட்ஸ் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பாதிப்பு தீவரமானால் கண்களில் இருந்து ரத்தம் கசியவும் வாய்ப்புள்ளது. அடினோ வைரஸ் பொதுவாக சளி மற்றும் இருமல் பாதிப்பினை ஏற்படுத்தும். அதே வைரஸ்தான் பிங்க் ஐ பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தி குறையும் போது இந்த வைரஸ் தீவிரமாகும். டான்சில்ஸ், அடினாய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் அவர்கள் உடலில் இருக்கும். எதிர்ப்பு சக்தி குறையும் போது இந்த வைரஸ் செயல்பட ஆரம்பிக்கும். அதனால் நம்முடைய உடலை எப்போதும் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டால் சில தற்காப்பு முறைகளை கையாள வேண்டும். கண்களை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். தொண்டை வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பாதிப்பு உள்ளவர்களை குணமாகும் வரை தனியறையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொடாமல் இருக்க வேண்டும். கைகளை சானிடைசர் மற்றும் சோப் கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மூணு வாரம் பொறுமையாக இருந்தால் இந்த நோய் தானாக குணமாகிவிடும். அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவாமல் பாதுகாக்கலாம்’’ என்றார் கண் மருத்துவர் ஷிபு வர்கே.

தொகுப்பு:  நிஷா

Tags :
× RELATED சிறுநீரக நோய்களும் சிறுநீரகப் பாதுகாப்பும் …ஓர் அறிமுகம்!