×

மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியே பழக்கமாகிவிட்டது எடப்பாடியே அவரை நீக்கி கையெழுத்து போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: நத்தம் விஸ்வநாதன் கிண்டல்

 

சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் சி.வி.சண்முகம் தரப்புக்கும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது எஸ்.பி.வேலுமணி கூறியதாவது; ஒரு இயக்கத்தில் கருத்து வேறுபாடு அல்லது விரிசல் ஏற்பட்டால், அந்த தேதியிலிருந்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதுதான் சட்டம். குறிப்பாக யாரையும் நீக்குவதோ, சேர்ப்பதோ, நியமிப்பதோ செல்லாது. நீதிமன்ற அல்லது தேர்தல் ஆணையக் கணக்குப்படி, 11-5-2026 அன்று யார் பதவியில் இருந்தார்களோ அவர்கள் அப்படியே நீடிப்பார்கள். அதன் பிறகு பொதுச்செயலாளர் என்ற முறையில் யாரை நீக்கினாலும் சேர்த்தாலும் அது செல்லாது.

இன்று கட்சி மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இந்த தோல்விக்கு என்ன காரணம் என்று ஆரோக்கியமாக பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து, கட்சியை ஒற்றுமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். அதைச் செய்யாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் நீக்கிக் கொண்டே இருக்கிறார். இதை நிறுத்த வேண்டும். பொதுச்செயலாளர் என்ற முறையில் அவர் எடுத்த எந்த நடவடிக்கையும் செல்லாது. அனைவரும் பதவியில் தொடர்வார்கள் என்றார்.

தொடர்ந்து, நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது: சட்டமன்ற அமைப்புக்கும் கட்சி அமைப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் எங்களை நீக்குகிறார். எஸ்.பி.வேலுமணி தலைமை நிலையச் செயலாளராக இருக்கிறார், நான் மாநில துணைச் செயலாளராக இருக்கிறேன். எங்களை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை. அவருக்கு நீக்கியே பழக்கமாகிவிட்டது. அதிமுகவிலிருந்து இவரால் நீக்கப்பட்ட 50, 60 பேர் இன்று மற்ற கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எல்லாரையும் வெளியேற்றிவிட்டு கடைசியில் பழக்க தோஷத்தில் எடப்பாடி பழனிசாமி ஆகிய நானே நீக்கப்படுகிறேன் என்று அவரே கையெழுத்துப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாரையும் நீக்கிவிட்டு கட்சியைப் பலவீனப்படுத்துகிறார் என்று கூறினார்.

 

Tags : Edappadi ,Natham Viswanathan ,Chennai ,Edappadi Palaniswami ,C.V. Shanmugam ,AIADMK ,S.P. Velumani ,
× RELATED கடலூர் அருகே புதிதாக 4 ஹைட்ரோகார்பன்...