சென்னை: சட்டப்பேரவையில் அதிமுகவைப் போல வெளிநடப்பு செய்யாமல், நடுநிலை வகித்ததன் மூலம் விஜய்க்கு மறைமுகமாக பாஜ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு பதவியை விஜய் ராஜினாமா செய்ததால், அக்கட்சியின் எண்ணிக்கை 107 ஆக குறைந்தது. ஆனால் மெஜாரிட்டிக்கு தேவையான 118 எம்எல்ஏ கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை தொடங்கியுள்ளது.
அதில் 5 சீட்டுகளை வென்ற காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் சேர்ந்தது. அதேபோல, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அவர்களின் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் மெஜாரிட்டிக்கு தேவையான 120 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. அதேநேரத்தில், தவெகவுடன் கூட்டணி சேர பாஜக விரும்பியது. இதற்காக தொழிலதிபர் ஒருவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் பாஜவுக்கு ஒரு எம்எல்ஏதான் உள்ளது. அதிமுக ஆதரவைப் பெற வேண்டும். அப்படி என்றால் சமமாக அமைச்சரவையில் இடம் கேட்பார்கள் என்று நினைத்த விஜய், திடீரென காங்கிரசின் ஆதரவைப் பெற்றார். இதனால் பாஜ வேண்டாம் என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் திடீரென அமித்ஷாவுக்கு வேண்டிய தொழிலதிபர் ஒருவர் மூலம், அதிமுகவை இரண்டாக உடைத்தார். வேலுமணி தலைமையிலான அதிமுக, அமித்ஷா ஆதரவுடன் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தது.
இதனால் தவெகவுக்கு 144 ஓட்டுக்கள் கிடைத்தது. எடப்பாடி அணியைச் சேர்ந்த 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர். பாஜ ஒரு எம்எல்ஏ மற்றும் பாமக எம்எல்ஏக்கள் 4 பேரும் நடுநிலை வகித்தனர். அதில்தான் பெரும் மர்மம் அடங்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தவெகவை பாஜ தலைவர்கள் எதிர்ப்பதாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி அணியைப் போல எதிர்த்து வாக்களித்திருப்பார்கள். அல்லது வெளிநடப்பு செய்திருப்பார்கள். ஆனால் பாஜவும், அவர்களது கூட்டாளியான பாமகவும் நடுநிலை வகித்துள்ளன. அதாவது எதிர்ப்பும் இல்லை.
ஆதரவும் இல்லை என்று நடுநிலை என்று கூறிவிட்டனர். இதன் மூலம் மறைமுகமாக தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை பாஜ எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அமித்ஷாவுடன் நெருக்கமாக உள்ள வேலுமணி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது பாஜவும் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை ஏற்காமல் நடுநிலை வகித்துள்ளது. அதேநேரத்தில் என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு எந்த வகையிலும் ஆட்சி அமைக்க உதவி செய்ய மாட்டோம் என்று கூறிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கும் தவெக இன்று என்டிஏ கூட்டணியில் இருந்து உடைந்து வந்த ஒரு அணி பங்கேற்கும் அமைச்சரவையை ஆதரிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து உடைந்து வரும் அணியும், அமித்ஷாவால் அனுப்பப்பட்ட அணிதான் என்பது எல்லோரும் தெரிந்து, தற்போது தவெக ஆதரவு நிலை எடுத்துள்ளதால், காங்கிரசின் நிலை தற்போது திரிசங்கு நிலை போல உள்ளதாக அக்கட்சிகளின் தொண்டர்கள் வருந்துகின்றனர்.
மக்களவை தேர்தல் நெருக்கத்தில் பாஜ மற்றும் அதிமுகவின் போட்டி அணியுடன் தவெக போட்டியிட்டால் காங்கிரஸ் எந்தப் பக்கமும் போக முடியாமல் 40 தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைந்த வாக்குகளைப் பெற்று தமிழக அரசியலில் இருந்தே வெளியேற்றப்படும் என்ற நிலை ஏற்படும் என்றும் அத்தொண்டர்கள் கருதுகின்றனர். இதனால் சட்டப்பேரவையில் பாஜ மற்றும் பாமக நடுநிலை வகித்ததையும், வேலுமணி அணி ஆதரிப்பதற்கும் பின்னால் அமித்ஷா இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
* தவெகவை பாஜ தலைவர்கள் எதிர்ப்பதாக இருந்தால் எடப்பாடி பழனிசாமி அணியைப் போல எதிர்த்து வாக்களித்திருப்பார்கள். அல்லது வெளிநடப்பு செய்திருப்பார்கள். ஆனால் பாஜவும், அவர்களது கூட்டாளியான பாமகவும் நடுநிலை வகித்துள்ளன
