×

தற்காலிக சபாநாயகராக அதிமுக அன்பழகன் தேர்வு; புதுச்சேரியில் மேலும் 3 அமைச்சர்கள் யார், யார்..? தேஜ கூட்டணிக்குள் கடும் போட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சியில் முதல்வராக நேற்று 2 அமைச்சர்களுடன் ரங்கசாமி பதவியேற்றுக் கொண்ட நிலையில் மீதமுள்ள 3 அமைச்சர்கள் யார், யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி நேற்று 5வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 11ம்தேதி முதலமைச்சர் ரங்கசாமி கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அமைச்சரவை பட்டியலை கொடுத்தார். அதில் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, நாராயணசாமி ஆகியோரின் பெயர்களும் அமைச்சரவை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகின.

இதற்கிடையே லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனக்கும் அமைச்சர் பதவி வேண்டுமென டெல்லி சென்று பாஜமேலிட தலைவர்களை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிகிறது. இதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள் சிலரும் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பதவியேற்புக்குமுன்பு நேற்று முன்தினம் மாலை மீண்டும் கவர்னர் கைலாஷ்நாதனை ரங்கசாமி இவ்விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசினார். அப்போது ஏற்கனவே வழங்கியிருந்த அமைச்சர் பட்டியலை மாற்றி வழங்கியதாக தெரிகிறது.

அதன்படி முதல்கட்டமாக முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுக் கொண்டனர். இன்னும் 3 பேருக்கு அமைச்சர்கள் பதவி வழங்க வேண்டும். வருகிற 20ம்தேதிக்குள் அவர்களும் பதவியேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், புதிய அமைச்சர்கள் யார், யார்? என்பதற்கு விடைகாணப்படாமல் தேஜ அணிக்குள் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இப்பதவிகளை பிடிக்க பாஜ, என்ஆர் காங்கிரசில் மட்டுமின்றி லஜக, அதிமுக எம்எல்ஏக்களிடமும் கடும் போட்டி நிலவுகிறது.

இதுஒருபுறமிருக்க புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்க, தற்காலிக சபாநாயகராக (அதிமுக அன்பழகன்) நியமிப்பதற்கான கோப்பை முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை அனுப்பி வைத்தார். இதனை கவர்னர் கைலாஷ்நாதன் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு அனுமதி கிடைத்தவுடன் தற்காலிக சபாநாயகர் உடனே நியமிக்கப்பட்டு, அவருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் சட்டசபை கூட்டப்பட்டு புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள். பின்னர் புதிய சபாநாயகரை பிரதான எண்ணிக்கை கொண்டுள்ள கட்சிகள் முன்மொழிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். அதன்பிறகு துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. புதிதாக கூடும் 16வது சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவராக திமுக நாஜிம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Adimuka Anfalagan ,Puducherry ,Rangasamy ,Deja Coalition ,Chief Minister ,
× RELATED பெண்கள் மற்றும் குழந்தைகள்...