குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. 500 ஆண்டுகளுக்கு முன், மன்னர் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி. 9 கிமீ சுற்றளவில் உள்ள ஏரியின் மொத்த கொள்ளவு 3645 கன அடி. உயரம் 24 அடி. சென்னையில் ஓடும் அடையாறு ஆற்றின் பிறப்பிடமாகவும் செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. கோடைகாலத்தில் சென்னை மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் வழங்குவதுடன், அடைமழை காலத்தில் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பதிலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், கொல்லச்சேரி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் மீன்பிடி தளமாகவும் உள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் அதிக ருசியுடையதாக கருதப்படுகிறது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அசைவ பிரியர்கள் வாரந்தோறும் குன்றத்தூருக்கு வருகை தந்து, செம்பரம்பாக்கம் ஏரி மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
ஆனால், பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்காத வகையில் இரும்புகேட் அமைத்து மூடி வைத்துள்ளது ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை நிர்வாகம். இதனால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட பார்வையாளர்கள் அனு மதிக்கப்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினாலும், தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, வைகை, கல்லணை மற்றும் ஆழியாறு போன்ற அணைகள் அனைத்துமே பாது காக்கப்பட்ட பகுதிகளாக இருந்தாலும் அங்கெல்லாம் பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்மூலம் அரசுக்கும் நாள்தோறும் வருவாய் கிடைத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியையும் சிறந்த சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல் கட்டமாக பார்வையாளர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஏரியை சுற்றியுள்ள முட்செடிகள், புதர்களை அகற்றி சுத்தம்செய்து மரங்கள், பல வர்ண பூச்செடிகளை நட்டுவைத்து, சிறுவர்கள் விளையாடும் வகையில் கேளிக்கை பூங்காக்கள் அமைத்து ஏரியை அழகுபடுத்தவேண்டும். மேலும், பெரியவர்கள், காதலர்களை கவரும் வகையில் படகுகுழாம் அமைக்கவேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஏரியை பார்வையிட வருகை தருவர்.
சென்னைக்கு அருகே இதுபோன்று பெரிய சுற்றுலாத்தலங்கள் இல்லை.
இதனை கருத்தில் கொண்டு அரசு செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதன் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையும் மேம்படும். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். சென்னை சிறந்த சுற்றுலாத்தலமாகவும் உருவெடுக்கும். செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமும் கிடைத்து வாழ்க்கை தரம் உயர வழிவகை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
