×

குன்றத்தூர் அருகே பழுதாகி நின்ற வேன் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து: குளிர்பானங்கள் சாலையில் ஓடியதால் பரபரப்பு

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சாலையோரத்தில் பழுதாகி நின்ற வாகனம் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் கவிழ்ந்ததில் குளிர்பானங்கள் சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் வேன் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே வந்தபோது, திடீரென வேன் டயர் பஞ்சராகி சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரும்பு பொருட்களை ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் மீது மோதியது. இதில், குளிர்பானம் ஏற்றி வந்த வேன் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த குளிர்பானங்கள் அனைத்தும் சாலையில் சிதறிஓடின. இரும்பு கம்பி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, அருகிலிருந்த மற்றொரு வேன் மீதும் மோதியதில் அந்த வாகனமும் சேதமடைந்தது.

இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிய ஓட்டுநர்களை பத்திரமாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து ஆவடி போக்குவரத்துப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்தபோது வாகனங்களில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில், ஐதராபாத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வந்தபோது கன்டெய்னர் லாரி டிரைவர் தூக்ககலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த குளிர்பானங்களை மாற்று வாகனத்தில் எடுத்து செல்லும் பணியில் கம்பெனி ஊழியர்கள் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags : Kundrathur ,Tada, Andhra Pradesh… ,
× RELATED நீட் தேர்வை முழுமையாக ரத்து...