×

60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

ஈரோடு, மார்ச் 2: ஈரோடு மாவட்டத்தில் 60வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கப்பட்டது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவிஷுல்டு தடுப்பூசி முதற்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அரசு துறையினர், போலீசார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 5 மையங்களிலும், 2 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், மாவட்டம் முழுவதும் பணியாற்றும் 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 60வயதுக்கு மேல் உள்ளவர்களும், 45 வயது முதல் 59வயதுக்கு உட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொரோனா தடுப்பூசி நேற்று முதல் போடப்படும் என அறிவிக்கப்பட்டு
இருந்தது. இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில், 24 அரசு மையங்களில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடும் பணி துவங்கியது. இதில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை 60 வயது மேற்பட்டவர்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் 42 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி போட அரசு கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதற்காக 24 அரசு மையங்களில் அமைக்கப்பட்டு, போதுமான அளவு தடுப்பூசி மருந்துகள் (டோஸ்) அரசிடம் பெறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். அல்லது தடுப்பூசி போடும் மையங்களுக்கு நேரடியாக சென்று, ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களை காண்பித்து போட்டுக் கொள்ளலாம். அரசு மையங்களை போல 42 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசு நிர்ணயித்த ரூ.250 கட்டணம் மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு வசூலிக்க அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...