விழுப்புரம், மே 13: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக தலைமையிலான அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் கட்டமாக வழிபாட்டுதலங்கள், பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 வாரகாலம் அவகாசமும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 192 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுவதாக கணக்கெடுக்கப்பட்ட 11 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் நகரில் எலைட் மதுபானக்கடை, ரயில்நிலைய பேருந்து நிறுத்தம் மற்றும் விக்கிரவாண்டியில் 2 கடைகள், திண்டிவனத்தில் 2 டாஸ்மாக் கடைகள், செஞ்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையத்தில், உளுந்தூர்பேட்டையில் தலா ஒரு கடைகள் வீதம் மொத்தம் 11 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று அறிவிப்பு வந்தவுடன் விழுப்புரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடைகளை உடனடியாக பூட்டி சீல்வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனால் இந்த கடைகளை நேற்று பிற்பகல் திறந்ததும் குடிமகன்கள் குவிந்தனர். விழுப்புரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள கடை முன்பு மதுபாட்டில் வாங்க குடிமகன்கள் படையெடுத்தனர். அப்போது அங்கிருந்த விற்பனையாளர்கள் கடையில் ரூ.25 லட்சம் வரை மதுபாட்டில்கள் இருப்பு உள்ளது. அனைத்தும் விற்றுதீர்ந்தவுடன்தான் கடைமூடி சீல்வைக்கப்படும். எனவே, வரிசையாக வரும்படி கூறினர். தொடர்ந்து மாலை வரை விற்பனை நடந்த நிலையில் அதன்பிறகு இந்த கடையில் உள்ள மதுபாட்டில்கள் இடமாறுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். மூட உத்தரவிடப்பட்ட இந்த கடைகளுக்கு மாற்று இடத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கவும் அதற்கான இடம் தேர்விலும் டாஸ்மாக ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
