×

சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும்: தமிழக அரசை நடத்துவதில் திமுகதான் உங்களுக்கு சீனியர்-பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். தமிழக அரசை நடத்துவதில் திமுக தான் உங்களுக்கு சீனியர் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை வாழ்த்தி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டப் பேரவையில் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய உங்களுக்கும், துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கக்கூடிய ரவிசங்கருக்கும் எங்கள் தலைவர் சார்பாகவும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறப்பாக நடுநிலைமையோடு செயல்படுவீர்கள் என்பதுதான் எங்கள் அத்தனை பேருடைய எதிர்பார்ப்பு.

நம்முடைய முதல்வர் நேற்று எங்களுடைய தலைவருடைய வீடுகளுக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று வாழ்த்துகள் பெற்றுக்கொண்டு சென்றார். அந்த அரசியல் நாகரிகம் இந்த பேரவையிலும் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம், எதிர்பார்ப்பு. இந்தியாவில் பண்பாட்டு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழ்நாடு சிறப்பாக முன்னேறி இருக்கிறது என்றால் இந்த பேரவையில் நடந்த விவாதங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள், இயற்றப்பட்ட சட்டங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவையெல்லாம் தான் காரணம். நாம் இங்கே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எதிரெதிர் வரிசையில் உட்கார்ந்து இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் பொழுது நாம் அனைவரும் ஒரே வரிசையில் முன் வரிசையில் நின்று உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைத்தான் தமிழ்நாட்டு மக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரும்புகிறார்கள். திமுகவும் அதைத்தான் விரும்புகிறது.

பேரவைத் தலைவரும், முதல்வரும், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச், அது உங்களுக்குத் தெரியும். 1967லேயே ஆட்சிக்கு வந்தது திமுக நாங்கள் தான் சீனியர்ஸ். அந்த அடிப்படையில் எங்களின் அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏனென்றால் நமக்கு எப்போதுமே தமிழ்நாட்டு மாநிலத்தின் நலன் தான் மிக மிக முக்கியம்.

நீங்கள் போட்டியின்றித் தேர்வாகி இருக்கிறீர்கள். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரான நானும் அவை முன்னவரும் உங்களை இந்த இருக்கையில், அமர வைத்திருக்கிறோம். இன்றைக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறோம். இனி எங்கள் இரண்டு தரப்பையும் நீங்கள் தான் கையைப் பிடித்து அரவணைத்து கோபம் இல்லாமல், கோபப்படாமல் – நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என்று தெரியும் – உங்களைக் கோபப்படுத்துகின்ற மாதிரி எந்தச் செயலையும் நாங்கள் செய்ய மாட்டோம். இரண்டு தரப்பையும் நீங்கள் வழிநடத்த வேண்டும்.

சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். அதில் தான் இந்த அவையின் பெருமை நிச்சயம் அடங்கி இருக்கிறது. பொதுவாக இதற்கு முந்தைய சட்டமன்றப் பேரவையை எடுத்துக் கொண்டால் ஆளுங்கட்சி வரிசையில் அதிக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அதைவிடக் குறைவான உறுப்பினர்களும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை கிட்டத்தட்ட ஆளுங்கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசை வலிமையாக இன்றைக்கு அமைந்திருக்கிறது. அதுதான் இந்தப் பேரவையின் இன்னொரு கூடுதல் சிறப்பு.

இதன் மூலமாக தமிழ்நாட்டு மக்கள் ஒரு முக்கியமான செய்தியை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அது என்னவென்றால், எதிர்க்கட்சி வரிசை மிக மிக வலிமையாக இருந்து இந்த அரசை, புதிய அரசை வழிநடத்த வேண்டும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று மக்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆகவே மக்களுடைய எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற மாதிரி எங்களுடைய பணிகள் நிச்சயம் இருக்கும்.

இந்த அரசு பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதை எதிர்க்கட்சிகள் எல்லோரும் விமர்சித்திருக்கிறோம். அதற்கு ஆளுங்கட்சியும் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள், நானும் பார்த்தேன். எங்களது கருத்து என்னவென்றால், பாஜ ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய மேற்குவங்க மாநிலத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படவில்லை. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அது பாடப்பட்டிருக்கிறது.

மேற்குவங்கத்தில் இன்றைக்கு யார் ஆளுநராகச் சென்று உட்கார்ந்து இருக்கிறார் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும். நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இங்கே ஆளுநராக இருந்தபோது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு தேசிய கீதம் பாட வேண்டும் என்று பேரவையின் மரபையே மாற்றச் சொன்னவர் தான் இன்றைக்கு மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருக்கிறார். அதை நாங்கள் உறுதியாக, எங்களது தலைவர், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக மறுத்தார்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம். நன்றி, வணக்கம். வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு. மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி விடக்கூடாது
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இதன் மூலமாக நாங்கள் சொல்ல வருவது, அடுத்து விரைவிலேயே இந்தப் பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தவிருக்கிறார். ஆகவே ஏற்கனவே உங்கள் அரசின் பதவியேற்பு விழாவில் நடந்த அந்தச் சம்பவம், அந்தத் தவறு மீண்டும் இந்தப் பேரவையில் நடப்பதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது, நாங்களும் அனுமதிக்க மாட்டோம். பேரவையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்து என்றைக்கும் இரண்டாவது இடத்திற்கு நாம் தள்ளிப்போக விடக்கூடாது. இந்த அரசு அதற்கு அனுமதிக்கக்கூடாது. மிகவும் விழிப்போடு இருந்து நம்முடைய உரிமையை, மரபைப் பாதுகாக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வலியுறுத்தி நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பேரவைத் தலைவரும், முதல்வரும், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நானும் ஒரே கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள். ஒரே கல்லூரியில் நாம் படித்திருந்தாலும் அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச், அது உங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.

Tags : DMK ,Tamil Nadu government ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED குமரி மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்