வேலூர்: சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தி விட்டு வேலூருக்கு அழைத்து வந்தபோது குண்டர் சட்ட கைதி தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகரை சேர்ந்தவர் சந்துரு (22). இவர் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இமானுவேல் என்ற கைதியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை, சந்துரு பிளேடால் அறுத்ததாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 9ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு சந்துரு மாற்றப்பட்டார். குண்டர் சட்ட நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சந்துருவை நேற்று முன்தினம் சென்னை பாரிமுனை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களின் தடுப்பு காவலை ஆய்வு செய்யும் அறிவுரைக் கழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர்.
அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு மீண்டும் அழைத்து வந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளை சத்திரம் மேம்பாலத்தின் அருகே வந்தபோது, போலீசார் வாகனம் டயர் பஞ்சர் ஆகி நின்றது. அப்போது சந்துரு இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறி தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து கைதி சந்துருவை தேடி வருகின்றனர். கைதி தப்பியோடிய விவகாரத்தில், பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த ஆயுதப்படை தலைமை காவலர் பாலமுருகன், முதல்நிலை காவலர் குமரன், காவலர் பாண்டியன் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து, வேலூர் எஸ்பி சிவராமன் நேற்று அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
