×

திமுக நிர்வாகியை தாக்கிய 8 பேர் மீது வழக்கு: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: சாலையோரம் நின்று பேசுமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர் 1வது வார்டு இஎஸ்ஐ மருத்துவமனை பின்புறம் உள்ள இந்திரா நகர் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் நேற்று மாலை இந்திரா நகர் பகுதியில் சாலையில் நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த வேலம்பாளையம் பகுதி திமுக கழக நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெகதீஷ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் சாலையோரம் நின்று பேசுமாறு கூறியுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஜெகதீஷ் மற்றும் ராமமூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து வட மாநில வாலிபர்கள் 2 பேரை தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.‌ இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அருகில் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்று தங்கள் சக தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே வந்து காத்திருந்து ஜெகதீஷ் மற்றும் ராமமூர்த்தி திரும்பி வரும்போது, அவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.‌ இதில் வாலிபர் ஒருவர் ஆயுதத்தால் தாக்கியதில் ஜெகதீஷ் தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இருதரப்பையும் விலக்க முற்பட்டனர். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரித்தனர். இது தொடர்பாக போலீசார் இன்று காலை 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஜெகதீஷ் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூரில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : DMK ,Tiruppur ,Indira Nagar ,1st Ward ESI Hospital ,Tiruppur… ,
× RELATED போதைப் பொருட்கள் தடுப்புப் படை: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு