×

நிகழ்காலத்தை இழக்கலாமா?

சென்ற இதழில் ஏன் உடலை விட்டு உயிர் பிரிகிறது என்பதற்காக இரண்டு காரணங்களைச் சொன்னோம். மூன்றாவது காரணம் இது. இந்து மற்றும் பௌத்த தர்மங்கள் இதை மிக முக்கியமாகக் கருதுகின்றன.
நாம் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்கள் (பிராரப்த கர்மாக்கள்) அனைத்தும் அந்த உடலின் மூலம் அனுபவித்து முடிக்கப்படும்போது, வினைச் சக்கரம் அந்த உடலுக்கான சுழற்சியை நிறுத்துகிறது.
‘‘தண்டனை முடிந்தது, இனி விடுதலை” என்பது போல, வினைகள் தீர்ந்தவுடன் உயிர் அடுத்த கட்டத்திற்கு நகரத் தயாராகிறது.
நான்காவது காரணம் கருவி பழுதாகுதல் (Physical Breakdown) உடல் என்பது உயிர் தங்கும் ஒரு வீடு அல்லது உயிர் இயக்கும் ஒரு வாகனம். விபத்து, தீராத நோய் அல்லது முதுமையின் காரணமாக அந்த வாகனம் உயிருக்கு ஒத்துழைக்க முடியாத அளவிற்குப் பழுதாகும்போது (Biological failure), உயிர் அதைத் துறந்து வெளியேறுகிறது. ஒரு சிதைந்த கூடாரத்தில் வசிக்க விரும்பாத பயணியைப் போல உயிர் அங்கிருந்து வெளியேறுகிறது.
​மறுபிறப்பை ஏற்காத சமயங்களில் ‘‘தீர்ப்பு நாள்” (Judgement Day) என்ற கோட்பாடு உண்டு. அங்கே ஆன்மா விசாரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு தர்க்க ரீதியான உண்மை வெளிப் படுகிறது:
‘‘விசாரிக்கப்படுபவர் (ஆன்மா) நிரந்தரமாக இருந்தால்தான், அவர் செய்த செயலுக்கான நீதியை (சொர்க்கம் அல்லது நரகம்) அவர் அனுபவிக்க முடியும்.”
​எனவே, உடல் அழிந்தாலும் உயிருக்கு அழிவில்லை என்பது உலகளாவிய ஆன்மிக உண்மையாகிறது.
​மரணம் என்பது ஒரு முற்றுப்புள்ளி அல்ல; அது ஒரு ஆன்மா தனது பயணத்தின் அடுத்த அத்தியாயத்திற்குச் செல்வதற்கான ஒரு இடைவேளை” மட்டுமே.
நான்கு காரணங்களில் எதுவாக இருந்தாலும், ஆன்மா தனது எல்லையற்ற பயணத்தை வேறு ஒரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
ஒரு பெரிய ஆச்சாரியர் வயது முதிர்ந்து, உடல் பலம் குறைந்து, படுக்கையில் ஓய்வெடுத்துக் கிடக்கிறார்.
அவரைச் சுற்றி அவருடைய சீடர்கள் நிற்கிறார்கள்.
அவர்கள் முகங்களில் துக்கம் நிரம்பியுள்ளது. “எங்கள் குருவை இழக்கப் போகிறோம்” என்ற எண்ணம் அவர்களை உடைத்து விட்டது.
அந்த நேரத்தில் ஆச்சாரியர் மெதுவாக கண்களைத் திறந்து, சீடர்களை அருகில் வரச் சொல்கிறார்.
“ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்கிறார்.
சீடர்கள் பதில் சொல்ல முடியாமல் அழுதுகொண்டே நிற்கிறார்கள்.
அவர் சிரித்தபடி சொல்கிறார்: ‘‘நான் உயர்ந்த இடத்திற்குப் போகின்றேன் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?” என்று கேட்கிறார்.
நமது சமய தத்துவ மரபில் “மரணம்” அல்லது “நிலையாமை” குறித்து தொடர்ந்து போதிப்பதற்கு ஒரு ஆழமான நோக்கம் உள்ளது.
அது மனிதனை அச்சத்தில் தள்ளுவதற்காக அல்ல; மாறாக, அவன் மனதில் உள்ள அச்சத்தை முற்றிலும் கரைத்து விடுவதற்காக.
ஏனெனில், மரண அச்சத்தில் சிக்கிய மனிதன் மூன்று பெரிய தவறுகளைச் செய்கிறான்:
முதல் தவறு – அவன் தனது வாழ்க்கையை உண்மையில் வாழ்வதில்லை.(he is just existing, not living)
அவன் வாழ்வது பயத்துடன்; இழப்பின் நினைவுடன்; பாதுகாப்பின் பேராசையுடன்.
இரண்டாவது தவறு – எதிர்காலம் என்ற மாயையில் மூழ்கி, நிகழ்காலத்தை இழக்கிறான்.
“நாளை என்ன ஆகும்?” என்ற கேள்வி, “இன்று என்ன செய்ய வேண்டும்?” என்பதைக் கவர்ந்துவிடுகிறது.
மூன்றாவது தவறு – அவன் நிரந்தரமற்றதை நிரந்தரமாக எண்ணுகிறான்.
“இது எப்போதும் என்னோடு இருக்கும்” என்ற தவறான நம்பிக்கை, அவனை மேலும் பற்றுகளில் கட்டிவிடுகிறது.
தவறான வழிகளில் சம்பாதிக்கவும், அளவுக்கு மீறிச் சேர்த்து வைக்கவும் முயல்கிறான்.
அந்தச் செல்வம் அவனை பாதுகாக்கும் என்று நினைக்கிறான்;
ஆனால், உண்மையில் அது அவனை
1, பயத்தில்
2. பற்றுகளில்
3. பொறுப்பில்லாத ஆசைகளில் கட்டிப் போடுகிறது.
ஒரு ஊரில் சம்பாதிப்பதில் மட்டுமே ஆசையுள்ள மனிதன் இருந்தான். அவன் வாழ்க்கையின் ஒரே நோக்கம் – அதிகமாக சம்பாதித்து சேர்த்து வைப்பது. எப்படி வந்தாலும் பரவாயில்லை; பணம் வந்தால் போதும் என்ற எண்ணம். நிறைய செல்வம் சேர்த்தான். வீடு, நிலம், நகை – எல்லாம் இருந்தது. ஆனால் அவன் மனதில் அமைதி இல்லை.
“இதை இழந்துவிட்டால் என்ன ஆகும்?” என்ற பயம் தினமும் அவனை தின்றுகொண்டே இருந்தது.
அதே ஊரில் இன்னொருவர் இருந்தார். அவரும் சம்பாதித்தார், ஆனால் தர்மமாக செலவு செய்தார்.
“இது என்னோட சொத்து இல்லை. எனக்கு கொடுத்த பொறுப்பு.” என்றே நினைத்தார்.அவர் சம்பாதித்ததில் ஒரு பகுதி குடும் பத்திற்கும், ஒரு பகுதி தேவையுள்ளவர்களுக்கும் கொடுத்தார்.
ஒருமுறை இருவரும் சந்தித்தனர்.
“நீங்களும் சம்பாதிக்கிறீர்கள், நானும் சம்பாதிக்கிறேன். ஆனால், ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள் எனக்கு அந்த அமைதியும் சந்தோஷமும் இல்லையே?”
“நீங்கள் சேர்த்ததை ‘என்னோடது’ என்று நினைக்கிறீர்கள். நான் வைத்திருப்பதை ‘இன்று எனக்கு வந்த பொறுப்பு’ என்று நினைக்கிறேன்.”
செல்வம் பிரச்னை இல்லை.
அதை நிரந்தரம் என்று நினைக்கும் மனமே பிரச்னை.
‘‘செல்வமே பெரு நெருப்பாய்” என்று சொன்ன ஆழ்வாரே, இன்னோர் இடத்தில ‘‘ஏய்ந்த பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே” என்றும் பாடுகிறார்.
அடுத்து மிக முக்கியமானது – மரணம் மரணம் என்று சொல்லுகிறோமே. அது நிகழ்வது உடலுக்கா – உயிருக்கா?
திருப்பாவையின் அவதாரிகையில் (முன்னுரை), உடலே ஆன்மா என்று நினைக்கும் நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கும், உடல் வேறு, ஆன்மா வேறு என்று நினைக்கும் ரிஷிகளுக்கும், ஞானத்தில் இமயமலைக்கும் ஒரு மண்துகளுக்குமுள்ள வேறுபாடு என்கிறார், உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை.
நாம் பெரும்பாலும் நம் உடல் தான் உயிர் என்று நினைக்கிறோம்.
உயிர் போய்விட்டது என்று சொன்னால், அப்படி ஒன்று அந்த உடலோடு இருந்தது, இப்பொழுது அது இல்லை, உடல் தனியாகவும் உயிர் தனியாகவும் ஆகிவிட்டது என்று பொருள்.
இந்தப் பிரிவுதான் மரணம்.
சின்ன உதாரணம்.
ஒரு ரயில் என்ஜின் – பல பெட்டிகளை இழுத்துக்கொண்டு வந்து நிலையத்தில் நின்றது. இப்போது இன்ஜின் தனியாகப் போய்விட்டது. எஞ்சின் (உயிர்) பெட்டியை (உடல்) விட்டுப் பிரிந்தால், பெட்டி இயக்கம் இழக்கிறது; ஆனால், எஞ்சின் அழிவதில்லை. அது வேறொரு பணிக்கு நகரலாம் அல்லது ஓய்வெடுக்கலாம்.
வேதாந்தம் சொல்வது போல, ‘‘உடல் = நான்” என்ற தவறான அடையாளமே மரண பயத்திற்கு அடிப்படை.
பகவான் கீதையில் சொல்வதுபோல், உடல் என்பது ஒரு சட்டை போன்றது.
ஆத்மா என்பது அதை அணிந்திருப் பவர் போன்றது.
சட்டை கிழிந்தால் அணிந்திருப்பவருக்கு அழிவில்லை. அவர் வேறு சட்டையைப் (உடல்) போட்டுக்கொள்வார் என்ற தெளிவு வந்து விட்டால், மரணம் என்பது ஒரு மாற்றமாக மட்டுமே தெரியும், முடிவாகத் தெரியாது.
மரண பயம் ஒரு மனிதனை ஆட்கொள்ளும்போது, அவனால்: பரமாத்மாவின் பேரன்பை உணர முடிவதில்லை. இன்று இருக்கும் அற்புதமான மனித வாழ்வை ரசித்து வாழ முடிவதில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பயம், நிகழ்காலத்தின் உன்னதத்தைத் தின்று விடுகிறது.

Tags :
× RELATED என் கடன் சிவப்பணி செய்து கிடப்பதே…