×

இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு; ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: ஆண்டுதோறும் 42 ஆயிரம் பேர் புதிதாக பாதிப்பு

 

இந்தியாவில் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு 30% அதிகரித்துள்ளது என்று `லான்செட்’ மருத்துவ ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கைப்படி, உலகம் முழுவதும் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. இது 2040ம் ஆண்டில் 29 லட்சமாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 112 நாடுகளில் உள்ள ஆண்களுக்கு இது பொதுவான பிரச்னை என்றும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% பேர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. கடந்த 2020ம் ஆண்டில், உலகளவில் 3,75,000 ஆண்கள் புரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தனர்.

எதிர்வரும் 2040ம் ஆண்டில் இந்த இறப்புகள் 85% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் இது ஐந்தாவது பெரிய காரணமாக உள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட மக்களில் மொத்தம் 3% புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 33,000 முதல் 42,000 பேர் புதிதாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் லான்செட் அறிக்கையின்படி, ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கும் 4 முதல் 8 பேர் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் புரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ளது. தேசிய அளவில் புற்றுநோய் பாதிப்புகள் 30% அதிகரித்துள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புற்றுநோயியல் துறை பேராசிரியர்கள் கூறியதாவது: `புரோஸ்டேட்’ என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் அமைந்துள்ளது. இது ஒரு வால்நட் அளவில் இருந்தாலும் வயதுக்கு ஏற்ப பெரிதாகிறது. ஆண்களுக்கு 45-50 வயதிற்குப்பிறகு புரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல. மேலும் அனைத்து ஆண்களும் இந்தச் சிக்கலை எதிர்கொள்வது இல்லை. புரோஸ்டேட் உறுப்பின் அளவு அதிகரிக்கத் துவங்கும்போது ​​மருத்துவர்கள் பி.எஸ்.ஏ சோதனையைப் பரிந்துரைக்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகுதான், புற்றுநோய் சந்தேகம் இருந்தால் கூடுதல் பரிசோதனைகள் செய்யப்பட்டு, முடிவுகளின்படி சிகிச்சை துவங்கப்படுகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய் என்பது உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டது. தைராய்டு புற்றுநோய் மற்றும் சில வகையான மார்பகப் புற்றுநோய்களும் உடலில் மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. இதற்கு முன்பு இந்தியாவில் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. ஏனெனில் மக்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்தது. அதாவது 60 வயதாக இருந்தது. ஆனால் இப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள புற்றுநோய் பதிவேட்டின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இந்த எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம். இந்த புற்றுநோய்க்கான பரிசோதனைத்திட்டம் இல்லாததால் புரோஸ்டேட் புற்றுநோயின் எண்ணிக்கை என்பது குறைவாக கணக்கிடப்படுகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைகள் நடக்கிறது. ஆனாலும் இந்த ேநாயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவது சவாலானது. இதன் காரணமாகவும் இறப்புகள் குறைவாகவே பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு மருத்துவ பேராசிரியர்கள் கூறினர்.

* இந்தியாவில், ஒவ்வொரு 1 லட்சம் ஆண்களுக்கு 4 முதல் 8 பேர் வரை ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
* கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் ப்ரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% வரை அதிகரித்துள்ளது.
* ஆண்களுக்கு 45-50 வயதிற்குப்பிறகு ப்ரோஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் வந்தாலும், அவை அனைத்தும் புற்றுநோய் அல்ல.

வெளிநாடுகளில் பரிசோதனைகள்
2020ம் ஆண்டிற்குப் பிறகு, கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள பணக்காரர்கள் தற்போது தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அதன் நேர்மறையான விளைவைக் காண 10ஆண்டுகளாகும். கடந்த 80, 90ம் ஆண்டுகளில், அந்த நாடுகளின் மக்கள் மலிவான நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொண்டார்கள். அதன் விளைவு இப்போது தெரிகிறது. அமெரிக்காவிலும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் அதிக அளவில் புற்றுநோய் பரிசோதனை இருக்கிறது. அதனால்தான் புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகளவில் பதிவாகிறது என்பதும் மருத்துவர்களின் கூற்று.

மதுவால் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு
ஆண்களின் வயது அதிகரிக்கும்போது புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கான சாத்தியங்களும் அதிகரிக்கிறது. அதேநேரம் சைவ உணவு உண்பவர்களைவிட அசைவ உணவு உண்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரவே வராது என்றும் கூற முடியாது. ஏனெனில் புற்றுநோய் வருவதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. மேலைநாடுகளில் ​​இந்தப் புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது. இது உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரித்து விடுகிறது. அதேநேரத்தில் இந்தப் புற்றுநோய்க்கான சிகிச்சை சாத்தியம் என்பதாலும் அதில் முன்னேற்றம் இருப்பதாலும் நோயாளிகள் நீண்டநாள் வாழ்கின்றனர்.

நோயாளி நிலைக்கு ஏற்றவாறு சிகிச்சை
‘‘அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது, சிறுநீர் தானாக வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்தால் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்து ெகாள்ள வேண்டும். இந்தவகை புற்றுநோய் கண்டறியப்பட்டு, அது உடலில் பரவியிருந்தால், அது எலும்புகளுக்குச் செல்கிறது. அதன் பிறகு முதுகு வலி, எலும்பு முறிவு, எலும்புகளில் வலி போன்ற பிரச்னைகள் தென்படும். புரோஸ்டேட் புற்றுநோயை ரத்தப் பரிசோதனை மூலமும் கண்டறியலாம். பெரும்பாலான ஆய்வகங்களில் இந்த வசதியுள்ளது. புரோஸ்டேட் உறுப்பு விரிவடைந்தால், இமேஜிங், அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகியவையும் செய்யப்படுகின்றன. ஆரம்பக் கட்டத்தில் நோயாளிக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பகுதி அகற்றப்படும். நோயின் நிலை தீவிரமடைந்தால் ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் நோயாளியின் நிலைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்படும்,’’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : India ,`Lancet ,
× RELATED 100 ஆண்டுகள் சேவையில் பஜாஜ்: சுதந்திரப்...