திமுக – அதிமுக இணைந்து ஆட்சி என நான் கூறியதாக வந்த தகவல் வதந்தி ஆளுநரின் காலதாமதமே குதிரை பேரத்திற்கு காரணம்: மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

 

மதுரை: குதிரை பேரத்திற்கு ஆளுநரின் காலதாமதமே காரணம். திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூறியுள்ளார். மதுரையில் நேற்று நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகித்த திமுக கூட்டணி தோற்றது. அதிமுக – பாஜ கூட்டணியும் தோற்றது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு 11 இடங்கள் குறைவாக இருந்தபோதும், அரசியல் மரபுகளின்படி ஆளுநர் முதலில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால், அதனை அழைக்கலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்புகளும், ஜனநாயக மரபுகளும் தெளிவாக கூறுகின்றன.

ஆனால், தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் கேரள ஆளுநர் இந்த மரபை பின்பற்றவில்லை. விஜய் தலைமையிலான தவெக எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிக்கும் என கேள்வி எழுப்பியிருப்பது மரபுக்கு முரணானது. பெரும்பான்மைக்கான சோதனை சட்டமன்ற அவையில் தான் நடைபெற வேண்டும். அது ராஜ்பவனில் நடைபெறக்கூடியது அல்ல. 1990களில் வாஜ்பாய் தலைமையிலான பாஜ பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. பின்னர் அது ‘13 நாள் அதிசயம்’ என அழைக்கப்பட்டது. அதைப்போல தற்போதும் தனிப்பெரும் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு மக்களின் தேர்தல் தீர்ப்பை புறக்கணித்து, பாஜ மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவை பின்வாசல் வழியாக ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றது. இது ஜனநாயக முறைக்கு எதிரானது. இது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தும். உடனடியாக விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். ஆனால், பொறுப்பு ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். மெஜாரிட்டியை நிருபிக்க சொல்ல வேண்டிய இடம் சட்டமன்றம். ஆளுநர் மாளிகை இல்லை. ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.

அதிக இடங்களில் வென்ற கட்சியை அலைக்கழிக்கும் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. திமுகவிடம் எங்கள் முடிவை தெளிவாக தெரிவித்து விட்டோம். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து பேசி தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தேஜ கூட்டணியில் உள்ள அமமுக எம்எல்ஏவிடம் மோசடியாக கையெழுத்து பெற்றதாக டிடிவி.தினகரன் குற்றம் சாட்டியிருப்பது தொடர்பாக எனக்கு தெரியாது. குதிரை பேர நடைமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள்.

ஆளுநரின் கால தாமதம் காரணமாகவே இது நடக்கிறது. தவெக அளித்த கடிதம் குறித்து ஆராய வேண்டியது ஆளுநரின் வேலை அல்ல. தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது மட்டுமே ஆளுநர் செய்ய வேண்டியது. விஜய் மதச்சார்பின்மை அரசை அமைப்பதாக தான் எங்களிடம் தெரிவித்துள்ளார். டெல்லி இங்கு ஆட்சியை பிடிக்க முயல்வது தவறு. நாங்கள் விஜய்யை நம்புகிறோம். திமுக – அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சிப்பதாக நான் கூறியதாக வந்த தகவல் வதந்தி.இவ்வாறு கூறினார்.

* ‘திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது’

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி கூறுகையில், ‘‘திமுகவுடன் நல்ல உறவு நீடிக்கிறது. பாஜ கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையில் ஒரு ஆட்சியை உருவாக்க காய் நகர்த்தப்பட்டது. யார் ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க முயன்றது என்பது எங்களுக்கு தெரியாது. யாருடைய ஆதரவை அதிமுக எதிர்பார்த்தது என்பதும் எங்களுக்கு தெரியாது. எங்களை பொறுத்தவரை பாஜ கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சி அமைப்பதை தடுப்போம். அதிமுக ஆட்சி அமைப்பதில் திமுகவின் பங்கு பற்றிய கேள்வியே எழவில்லை’’ என்றார்.

Related Stories: