×

பிளஸ் 2 வணிகவியல் மாணவர்களும் டிப்ளமோ நேரடி 2-ம் ஆண்டில் சேரலாம் தொழில்நுட்ப கல்வித்துறை உத்தரவு

நாகர்கோவில், மே 7: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பைத் தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் 2026-2027-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இதுவரை சில கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இனி பிளஸ்-2 தேர்வில் வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தொழில்நுட்ப கல்வி இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, பிளஸ்-2 தேர்வில் எந்தப் பாடப்பிரிவை எடுத்து படித்திருந்தாலும், அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், அவர்களை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகளைப் படித்த மாணவர்களும் இனி தடையின்றி தொழில்முறை சார்ந்த கல்விக்குள் நுழைய முடியும். மேலும், முதலாம் ஆண்டை படிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை சேமிக்க முடிவதோடு, இரண்டு ஆண்டுகளிலேயே பட்டயப்படிப்பை முடித்து வேலைவாய்ப்பை பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம் உயர்கல்வி பயில விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாக கருதப்படுகிறது.

Tags : Department of Technical Education ,Nagercoil ,Tamil Nadu ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது