×

குமரியில் காலநிலை மாற்றத்தால் மாமரங்களில் வாடி விழும் மாவடு

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் மாமரங்களில் இருந்து மாவடு வாடி கீழே விழுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கனிகளின் ஒன்றான மாம்பழம் சீசன் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இருக்கும். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து பல வகையான மாம்பழங்கள் விற்பனைக்கு குமரி மாவட்டத்திற்கு வருவது வழக்கம். மா மரங்கள் பொதுவாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பூக்கத்தொடங்கும். ஜனவரி முதல் பிப்ரவரி வரை பூக்கள் முழுமையாகப் பூத்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் காய்க்கத்தொடங்கி மே, ஜூன் மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர்காலம் என்பதால், பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்கும். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் மாம்பழம் சீசன் தொடங்கியபோது பழங்கள் புழுக்கள் இல்லாமல் இருந்தது. அதுபோல் மகசூலும் அதிகமாக கிடைத்தது. ஆனால் பிப்ரவரி மாதத்தில் பூக்கள் பூத்த மாமரங்களில் ஏப்ரல் மாதத்தில் காய்கள் வர தொடங்கியது. குமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் மா மரங்களில் காய்க்க தொடங்கிய மாங்காய்கள் வாடி கீழே விழுந்து வருகிறது. இதன்காரணமாக மா மரங்களில் மகசூல் குறையும் நிலை இருந்து வருகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மா மரத்திற்கு வெயில் அதிகமாக இருக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போதுதான் மகசூலும் அதிகமாக கிடைக்கும். குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகதான் இருந்து வருகிறது. இதனால் மாமரங்களில் மகசூல் அதிகமாக உள்ளது. ஆனால் மாவட்டத்தில் ஒரே சீரான காலநிலை இல்லாமல் மாறிமாறி வருதால், மாமரங்களில் தாமதமாக வந்த காய்கள் வாடி கீழே விழுந்து வருகிறது. என்றார்.

Tags : Kumari ,
× RELATED ஏழாயிரம்பண்ணை அருகே கல்குவாரி நீரில்...