×

தேவாரத்தில் தேய்ந்து வரும் முருங்கை விவசாயம்: சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை

 

தேவாரம்: தேவாரம் பகுதியில் குறைந்து வரும் முருங்கை சாகுபடியை அதிகரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய அடிவாரப் பகுதியில் உள்ள கோம்பை, தேவாரம், உத்தமபாளையம் மற்றும் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வந்தது. இப்பகுதியில் விளையும் முருங்கைக் காய்களுக்கு மார்க்கெட்டுகளுக்கு நல்ல மவுசு உண்டு.

அறுவடை செய்யும் முருங்கை காய்களை பிரித்து மூட்டையாக கட்டி, மார்க்கெட்டுகளுக்கு அனுப்பும் பணியில் ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. தேவாரம் பகுதியில் இருந்து கும்பகோணம், சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு முருங்கைக் காய் அனுப்பட்டு வருகிறது. மலையடிவார விளைநிலங்களில் சாகுபடி செய்யப்படும் முருங்கை, விவசாயிகளுக்கு நல்ல லாப்பத்தை ஈட்டி தந்தது. மாவட்டத்தில் தேவாரம் பகுதியில் மட்டும் 500 ஏக்கருக்கும் மேல் முருங்கை சாகுபடி நடந்து வந்தது.

இந்த நிலையில், சாகுபடி பற்றி விழிப்புணர்வு இன்மை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் முருங்கை சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, தேவாரம் பகுதியில் முருங்கை சாகுபடியை அதிகரிக்க, இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சம்மந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடல் சூட்டைக் குறைக்கும்…
கோடை காலங்களில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கவும், உடல் சூட்டை தடுக்கவும் முருகைக் காய் சாப்பிடலாம். இந்த காயில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை அதிகம் இருப்பதால், எலும்பு அடர்த்தியை அதிகரித்து மூட்டு பிரச்னைகளைத் தடுக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், தொற்றுநோய்கள், சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண் பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது.

ரத்த சர்க்கரை அளவைச் சீராக்க உதவுகிறது. ரத்தம் மற்றும் சிறுநீரை சுத்தம் செய்யும். வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பார்வைத்திறனை மேம்படுத்தி, சருமத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது.

Tags : DEWARA ,Dewaram ,Devaram ,Dewaram, Theni District ,
× RELATED 2 குட்டிகளுடன் கரடி உலா: தொழிலாளர்கள் பீதி