×

3 முக்கிய தலைவர்கள் மல்லுக்கட்டு; முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் கேரளத்தில் காங்கிரஸ் திணறல்: மேலிட பார்வையாளர்கள் திருவனந்தபுரம் வருகை

 

திருவனந்தபுரம்: முதல்வர் பதவிக்கு 3 முக்கிய தலைவர்கள் மல்லுக்கட்டுவதால் கேரளத்தில் தேர்தல் முடிவு வந்து 3 நாட்கள் ஆகியும் முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாத நிலை நிலவுகிறது. முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக்குழு திருவனந்தபுரம் வந்துள்ளது. கேரளத்தில் தொடர்ந்து 10 வருடங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியில் தேர்தல் களத்தை சந்தித்தது. வழக்கமாக காங்கிரசில் மூத்த தலைவர்களுக்குத் தான் தேர்தலில் அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்த முறை பெரும்பாலும் மூத்த தலைவர்களை ஒதுக்கி வைத்து இளைஞர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு வழங்கப்பட்டது.

இடதுசாரி கூட்டணி சார்பில் இந்த முறை போட்டியிட்ட 13 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். இவர்களில் 9 பேரையும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த இளைஞர்கள் தான் தோற்கடித்தனர். கோழிக்கோடு மாவட்டம் பேராம்பிரா தொகுதியில் இடதுசாரி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.பி. ராமகிருஷ்ணன் படுதோல்வி அடைந்தார். நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரை முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இளம்பெண் பாத்திமா தெஹ்லியா தான் தோற்கடித்தார். முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட இவர் தான் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் சட்டசபைக்கு செல்லும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்எல்ஏக்களின் சராசரி வயது 46 ஆகும். 63 எம்எல்ஏக்களில் 27 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஆவர். 2 பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல திட்டங்களை வகுத்த காங்கிரஸ் இப்போது முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகிறது. கடந்த பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சதீசன், அதற்கு முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா, ஆலப்புழா தொகுதி எம்பியான கே.சி. வேணுகோபால் ஆகிய 3 பேரும் தான் முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டி வருகின்றனர்.

இவர்கள் கட்சிக்குள் தங்களுக்கு ஆதரவை திரட்டி வருகின்றனர். இவர்களுடைய ஆதரவாளர்கள் தங்களது தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பேனர்களையும் வைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் தங்களுடைய தலைவருக்குத் தான் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று இவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். தனக்கு 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கே.சி. வேணுகோபால் கூறுகிறார். தங்களுக்குத் தான் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சதீசனும், ரமேஷ் சென்னித்தலாவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் முதல்வரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், முகுல் வாஸ்னிக் ஆகியோரை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தது. இவர்கள் நேற்று இரவு திருவனந்தபுரம் வந்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்குப் பின் காங்கிரஸ் மேலிடக்குழு, எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளது. அப்போது எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். அதன் பிறகு முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து மேலிடக் குழு தீர்மானிக்கும்.

பின்னர் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை காங்கிரஸ் மாநில தலைவரிடம் இக்குழு ஒப்படைக்கும். இதன் பிறகே முதல்வர் யார் என்பது முறைப்படி அறிவிக்கப்படும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் முதல்வரை தேர்வு செய்வோம் என்று தேர்தலுக்கு முன்பு ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். ஆனால் தேர்தல் முடிவு வந்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை முதல்வரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு காங்கிரசில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags : Congress ,Thiruvananthapuram ,Chief Minister ,Kerala ,
× RELATED திருப்பதியில் 6 மணி நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்