திருமங்கலம், மே 7: திருமங்கலம் நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கோடை மழையால் பல்வேறு பகுதிகளில் 3 மணிநேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு வேளையில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் லோவோல்டேஜ் இருந்ததால் மின்சாதன பொருட்கள் பழுதானதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கோடை மழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணிநேரத்திற்கு பின்பும், கிராம பகுதிகளில் அதிகாலையிலும் மின்சப்ளை சீரானது.
